MAP

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் முன் திருப்பயணிகள்  வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் முன் திருப்பயணிகள்   (Vatican Media)

அமைதி மற்றும் அன்பின் சான்றுகளாக இருக்க நம்மை அழைக்கும் இறைவன்

நமது நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில், நமது செயலுக்கான பலனை நாம் உடனடியாகக் காணாவிட்டாலும் கடவுள் நம்மில் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவன் எப்போதும் நம்முடன் நடக்கின்றார், நமது சோதனை நேரங்களில் நம்மைத் தாங்குகின்றார், அவரது அமைதி மற்றும் அன்பின் சான்றுகளாக இருக்க நம்மை அழைக்கின்றார் என்ற மகிழ்வை எடுத்துரைக்கும் அடையாளமாக செக் குடியரசு நாட்டைச் சார்ந்த இறைமக்களின் உரோம் நோக்கிய திருப்பயணம் இருக்கின்றது என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 29, சனிக்கிழமை செக் குடியரசு நாட்டின் மறைமாவட்ட ஆயர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் திருப்பயணிகளுக்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை அவர்களின் வாழ்த்துச் செய்தியினை மாலையில் (3.00) செக் குடியரசு நாட்டின் திருப்பயணிகளுக்காக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் நடைபெற்ற திருப்பலியின் துவக்கத்தில் எடுத்துரைத்தார் ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் மைக்கேல் செர்னி.

எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டை முன்னிட்டு செக் குடியரசு நாட்டில் இருந்து உரோமைக்கு திருப்பயணிகளாக வந்திருக்கும் மக்கள் அனைவரின் பயணமானது, நம்பிக்கையைப் புதுப்பித்தல், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாம் திருத்தந்தையுடனான பிணைப்பை உறுதிப்படுத்துதல் போன்றவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவன் தனது வாக்குறுதிகளுக்கு எப்போதும் நம்பிக்கையுள்ளவர் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” (உரோ: 5:5) என்ற திருத்தூதர் பவுலின் வரிகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

செக் குடியரசு நாட்டின் புனிதர்களான அடல்பெர்த்,  சிரில், மெத்தோடியஸ் மற்றும் பலரின் சான்றுள்ள வாழ்வால் அறிவொளி பெற்ற, வளமான கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இறைமக்களின் திருப்பயணம் விளங்குகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், புனிதர்களைப்போல நாமும் நற்செய்தியைத் துணிவுடன் அறிவிக்கவும், தடைகள் மற்றும் சிரமங்களைக் கண்டு அஞ்சாமல் வாழவும் அழைக்கப்படுகின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாத்தியமற்றது என்று தோன்றிய இடங்களிலும் கூட, நற்செய்தியின் ஒளியைத் துணிவுடனும், பொறுமையுடனும் சுமந்து சென்ற புனிதர்களின் சான்றுள்ள வாழ்வானது, கிறிஸ்தவப் பணி என்பது காணக்கூடிய முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக, கடவுளுக்கு உண்மையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை நமக்குக் கற்பிக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

“நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார்” (1கொரி:3:6) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அன்பு மற்றும் விடாமுயற்சியுடன் விதைத்து, நீர்பாய்ச்சுவதே நமது பணியாக இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நம்மிடம் உள்ள சிறியவற்றையும் கடவுளிடம் கொடுக்க நாம் அழைக்கப்படுகின்றோம் என்று எடுத்துரைத்துள்ளார்.

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருந்த சிறுவன், இயேசுவின் கைகளில் அதனை ஒப்படைத்ததும், அது ஏராளமானவர்களுக்கான உணவாக மாறியதுபோன்று, நம்மிடம் உள்ளவற்றை நாம் இறைவனிடத்தில் அர்ப்பணிக்கும்போது, கடவுள் அதை பலுகிப்பெருகச்செய்து நாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத வழிகளில் நமக்கு பலனளிப்பார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நமது நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில் நமது செயலுக்கான பலனை நாம் உடனடியாகக் காணாவிட்டாலும் கடவுள் நம்மில் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், செக் குடியரசு நாட்டின் புனிதர்களின் வரலாறு இதை நமக்குக் கற்பிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

புனித நெப்போமுக்கின் யோவான் மற்றும் நம்பிக்கையின் சான்றுகளாக இருந்த பலரின் விடாமுயற்சியைப் பற்றி சிந்திப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், துன்புறுத்தல் போன்ற சோதனைக் காலங்களில் கூட, கடவுளை நம்புபவர்கள் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்குக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையின் பாதையில் மேய்ப்பர்கள் மற்றும் இறைமக்கள் ஒன்றிணைந்து நடப்போம்,  ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, நமது வாழ்வால் அமைதி மற்றும் எதிர்நோக்கின் சான்றுகளாக இவ்வுலகில் மாறுவோம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நமது நம்பிக்கை என்பது நமக்கானது மட்டுமல்ல, அது மகிழ்வுடன் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு கொடை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மார்ச் 2025, 14:57