MAP

இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றும் தன்னார்வப் பணியாளர்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி, பணி பெற அன்று பிறருக்கு பணிபுரிவதற்காக அழைக்கப்பட்டிருக்கும் தன்னார்வலர்களின் பணி பாராட்டுக்குரியது என்றும், தனிமை, வறுமை என்னும் பாலைவனத்தில் பல்வேறு தன்னார்வப்பணிகள் புதிய மனுக்குலத்திற்கான இலைகளைத் துளிர்க்கச்செய்து, புதிய தோட்டத்தை உருவாக்குகின்றது, இறைவனின் கனவான இத்தோட்டம் நம் எல்லோரது கனவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலிக்குத் தலைமையேற்று திருத்தந்தையின் மறையுரைகளை வாசித்தளித்தார் ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கல் செர்னி.

தூய ஆவியாரால் பாலைவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு இறைவனைப் பின்தொடரும் இயேசுவின் பயணத்தோடு நமது தவக்காலப் பயணம் ஆரம்பமாகின்றது என்றும், அமைதியான பாலைவனம் செவிசாய்க்கும் இடமாகவும், எதற்கு நாம் செவிசாய்க்கவேண்டும் என்று ஆழமாக சிந்தித்து செயல்படுவதற்கான ஓர் இடமாகவும் மாறுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மண்ணிலிருந்து எதுவும் வளர முடியாத, வானத்திலிருந்து மழைபெறாத பாலைவனத்திற்கு தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் இயேசு இறைவனின் இத்தகைய அழைப்பைக் கீழ்ப்படிதலுடன் ஏற்றுக்கொள்கின்றார் என்றும், இப்பாலைவன அனுபவத்தில் மனிதன் தனது ஆன்மிக ஆற்றல், உணவு மற்றும் வார்த்தையின்  தேவையை உணர்கின்றான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

40 நாள்கள் பாலைவனத்தில் நோன்பிருந்து செபித்த இயேசு தூய ஆவியின் வார்த்தையால் அல்ல, மாறாக, அலகையின் வார்த்தையால் சோதிக்கப்படுகின்றார் என்றும், சோதனைக்கு உட்படுத்தப்படும்போது நாம் தனியாக இல்லை பாலைவனத்தின் வழியாக வாழ்க்கைக்கானப் பாதையைக் காட்டும் இயேசு நம்முடன் இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் ஒரு சாதாரண மனிதனாக இறைமகன் இயேசு நமக்கு முன்மாதிரிகை காட்டவில்லை, மாறாக  அலகையின் தாக்குதல்களை எதிர்ப்பதற்கும், செல்லும் பாதையில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கும், அவர் நமக்கு ஆற்றலைத் தருகிறார் மாதிரி காட்டுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் சோதனைகளில் இடம்பெறும் தொடக்கம், மாதிரி, விள໾வு என்னும் மூன்று கருத்துக்களின் அடிப்படையில் தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

தொடக்கம்

இறைமகன் இயேசு பாலைவனத்திற்குச் செல்வது அவர் எத்துணை துணிச்சல் நிறைந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல, மாறாக அவர் எவ்வளவு வலிமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக என்றும், அதேவேளையில் தூய ஆவிக்கு தன்னை முற்றிலும் கையளித்து இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு உடனடியாக பதிலளிக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நாம் சோதனைகளுக்கு உட்படும்போது, சோதனையின் நிழலும், தீய விள໾வுகளும் நமது வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதிக்கின்றன என்றும், "சோதனையில் விழாதவாறு காப்பாற்றும்" என்று கடவுளிடம் நாம் வேண்டும்போது நமது செபத்திற்குப் பதிலளித்துக் கடவுள் நம்மைக் காப்பாற்றுகின்றார் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மனுவுரு எடுத்த இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கின்றார், சோதனைக் காலத்தில் நம் அருகில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றார் என்றும், இறைத்தந்தையின் வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு “சாத்தானே தந்தை” என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், ஏதேன் தோட்டத்தில் நுழைந்த ஆதாம் போல, புதிய ஆதாமாகிய இயேசு பாலைவனத்திற்குள் நுழைகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரி

அலகை நம்மிடத்தில் பிளவுகளை ஏற்படுத்துகின்றது, ஆனால் இயேசு கடவுளையும் மனிதனையும் இணைக்கும் இணைப்பாளராகச் செயல்படுகின்றார் என்றும், தந்தையுடனான உறவை, இயேசு தனது மீட்பு வழியாக வெளிப்படுத்துகின்றார், கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

“நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” (லூக்கா 4: 8) என்ற இறைவார்த்தையின் வழியாக இயேசுவின் தந்தை, கடவுள் என்பதை வெளிப்படுத்தி சோதித்த அலகை, கடவுளுடனான உறவில் நம்மை வேறு வழியில் சோதிக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்

கடவுள் உண்மையாகவே நமது தந்தையல்ல நாம் அவரால் கைவிடப்பட்டவர்கள் என்பதை நமது காதுகளுக்குள் அடிக்கடி அலகை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றது என்றும், பசியோடிருப்பவர்கள் உணவு இல்லாமல் வாடும்போது வானதூதர்கள் அவர்களுக்கு உதவுவதில்லை என்பதையும் அலகை நமக்கு கூறி நம் மனதை மாற்றுகின்றது, இறைவனை விட்டு விலகி இருக்க வலியுறுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

விள໾வு

கிறிஸ்து இயேசு தீமையை வென்றார். அலகையை நிராகரித்தார், இருப்பினும் “அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது” என்ற வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, இயேசு கல்வாரி மலையில், “நீர் இறைமகன் என்றால் இச்சிலுவையிலிருந்து கீழே இறங்கி வாரும்” என்று சோதிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலைவனத்தில் சோதனையாளர் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் கிறிஸ்துவின் வெற்றி, அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மகிழ்வில் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், சோதனைகளில் வீழும்போது நமது தோல்வி உறுதியானது அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

சோதனைகளில் நாம் வீழும்போது, நமது ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் கடவுள் தனது எல்லையற்ற அன்பால், மன்னிப்பால் நம்மை உயர்த்துகிறார், நம்முடைய சோதனை தோல்வியில் முடிவதில்லை, ஏனென்றால் கிறிஸ்துவில் நாம் தீமையிலிருந்து மீட்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மார்ச் 2025, 15:20