MAP

மகனை கட்டியணைக்கும் தந்தை மகனை கட்டியணைக்கும் தந்தை  

இரக்கமுள்ள தந்தையின் இதயத்தை வெளிப்படுத்தும் உவமை

மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகமான காணாமற்போன மகன் உவமையை முன்னிறுத்தி தனது கருத்துக்களை மூவேளை செப உரையாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

மெரினா ராஜ் - வத்திக்கான்

காணாமற்போன மகன் உவமை வழியாக இயேசு, கடவுளின் இதயத்தை வெளிப்படுத்துகின்றார் என்றும், அனைவரிடத்திலும் இரக்கமுள்ள கடவுள், நாம் ஒருவர் மற்றவரை உடன்பிறந்த உணர்வுடன் அன்பு செய்வதற்காக நமது காயங்களைக் குணப்படுத்துகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகமான காணாமற்போன மகன் உவமையை முன்னிறுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை மூவேளை செப உரையாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவிகள் தன்னை அணுகி வருவதைக் கண்டு, பரிசேயர்கள் மகிழ்வடைவதற்குப் பதிலாக முணுமுணுக்கின்றார்கள், முதுகுக்குப்பினால் பேசுகின்றார்கள் என்பதைக் கவனித்த இயேசு அவர்களுக்கு உவமை வழியாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார், இறைத்தந்தையின் இரக்கமுள்ள இதயத்தின் அன்பை எடுத்துரைக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

குணமளிக்கும் காலம்

குணமளிக்கும் காலமாகிய இத்தவக்காலத்திலும் யூபிலி ஆண்டிலும் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையக் கடவுளின் குணமளிக்கும் வல்லமையைத் தனது உடலளவிலும் மனதளவிலும் அனுபவித்து வருவதாக எடுத்துரைத்து, மீட்பரின் சாயலில், தங்களது வார்த்தை, அன்பு, செபம் போன்றவற்றால் மற்றவர்களைக் குணப்படுத்தும் கருவிகளாக இருக்கும் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

பலவீனமும் நோயும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் என்று மொழிந்துள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து நமக்கு அளித்த மீட்பின் வழியாக நாம் அனைவரும் உடன்பிறந்தவர்களாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்காக வேண்டுகோள் 

இறைத்தந்தையின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அமைதிக்காக செபிப்போம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் அமைதி நிலவ தொடர்ந்து செபிப்போம், குறிப்பாக நிலஅதிர்ச்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் நாட்டிற்காகவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்சூடானின் நிலை அறிந்து மிகவும் கவலை கொள்வதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நாட்டின் பதற்றமான சூழலைக் குறைக்க அனைத்து தலைவர்களும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற தனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, துணிவுடனும் பொறுப்புடனும், ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், அப்போது தான் தென்சூடான் நாட்டில் வாழும் அன்பு மக்களின் துன்பத்தைத் தணித்து, அமைதி மற்றும் நிலைத்தத்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அமைதியின் பாதைக்கான உரையாடல்

சூடானில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் எளிய மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், போர், வன்முறை மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தங்களது உடன் சகோதரர்களாகிய பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதை முதன்மையாகக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நெருக்கடியான நிலைக்கு நீடித்த தீர்வைப் பெறக்கூடிய புதிய பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்படும் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இந்த பயங்கரமான மனிதாபிமானப் பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை பன்னாட்டு சமூகம் அதிகரிக்கும் என்றும் தெரித்துள்ளார்.

தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் இடையேயான, எல்லையை நிர்ணயிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் ஒப்புதலுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இது இரு நாடுகளும் அமைதியின் பாதையில் தொடர்வதற்கான சிறந்த அரசியல் நடவடிக்கை என்று எடுத்துரைத்து, இரக்கத்தின் தாயாம் அன்னை மரியா, மனித குடும்பத்திற்கு அமைதியை அளித்து உதவுவாராக என்று குறிப்பிட்டு தனது மூவேளை செப உரைக்கருத்துக்களை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மார்ச் 2025, 15:40