MAP

திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லக் கோவிலில் (கோப்புப்படம் 2020) திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லக் கோவிலில் (கோப்புப்படம் 2020)   (ANSA)

திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் 12 ஆண்டுகள்

2013ஆம் ஆண்டு மார்ச் 13, அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12-ஆவது ஆண்டினை வருகின்ற மார்ச் 13, வியாழனன்று நிறைவு செய்கின்றார். மார்ச் 11 செவ்வாயன்று, இயேசு சபையில் சேர்ந்ததன் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2013 -ஆம் ஆண்டு முதல் 2025 – ஆம் ஆண்டு வரை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தனது எளிமையான பண்பாலும், பணிவாலும் திருஅவையில் அளப்பரிய பணிகளைச் செய்து கொண்டிருப்பவர் திருத்தந்தை பிரான்சிஸ். 2013ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12ஆவது ஆண்டினை வருகின்ற மார்ச் 13 வியாழனன்று நிறைவு செய்கின்றார். மார்ச் 11, செவ்வாயன்று இயேசு சபையில் சேர்ந்ததன் 67 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே இன்றைய நமது நிகழ்வில், திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் பன்னிரண்டு ஆண்டுகள் என்னும் தலைப்பில் அவரது தலைமைத்துவப் பணி பற்றியக் கருத்துக்களைக் காண்போம்.

புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரை தனது பெயராக ஏற்று  திருஅவையின் 266 ஆவது திருத்தந்தையாக, ஏழைகளுக்காக வாழும் ஏழைத்திருஅவையைக் கனவும் காண்பவராக, தலைமைத்துவப் பொறுப்பினை ஏற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். வருகின்ற மார்ச் 13, வியாழனன்று தன் பன்னிரண்டாண்டு தலைமைத்துவ வழிகாட்டுதல் பணியை நிறைவு செய்ய இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையும் பணிவும், ஏழைகளுக்கு உதவும் குணமும், அமைதிக்காக செபிக்கும் நல்மனமும் நிறைந்தவர்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாள்

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தனது எளிமையான வாழ்வு முறையை அனைவருக்கும் வெளிப்படுத்தினார். 2013 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தனது தலைமைத்துவப் பணியைத் துறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 13, புதன்கிழமையன்று கான்கிளேவ் எனப்படும் திருத்தந்தையைத் தேர்வு செய்யும் கர்தினால்கள் அவையின், இரண்டாம் நாள் ஐந்தாம் சுற்றில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார் கர்தினால் பெர்கோலியோ. கூடியிருந்த கர்தினால் - வாக்காளர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றார். கர்தினால்-வாக்காளர்களில் மூத்தவர் என்ற முறையில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே, கர்தினால் பெர்கோலியோவை அணுகி, “சட்டமுறைப்படியான தேர்தல் வழி உமக்கு அளிக்கப்படுகின்ற திருத்தந்தைப் பதவியை ஏற்கிறீரா”? என்று கேட்க, அதற்கு “ஏற்கிறேன்” என்று பதிலிறுத்தார் கர்தினால் பெர்கோலியோ. பின்னர் கர்தினால் ரே, புதிய திருத்தந்தையிடம் “என்ன பதவிப்பெயரைத் தெரிந்துள்ளீர்”? என்று கேட்க, அக்கேள்விக்குப் பதில்மொழியாகத் திருத்தந்தை “பிரான்சிஸ்” என்று கூறினார். சிவப்பு நிறமுள்ள கர்தினால் அங்கியைக் களைந்துவிட்டு, திருத்தந்தைக்குரிய வெள்ளை அங்கியை அணிந்துகொண்ட புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த வெள்ளை அங்கியின் மேல், திருத்தந்தைக்கே உரிய கருஞ்சிவப்பு நிறத்திலான தோள்சுற்றாடை (mozzetta) மற்றும் அதன்மேல் தங்கக் கழுத்துச் சிலுவை அணிவதை வேண்டாம் என்று கூறினார். அத்தகைய ஆடம்பரம் தமக்கு வேண்டாம் என்று கூறி, தாம் ஆயரான நாளிலிருந்தே அணிந்துவந்துள்ள இரும்பிலான கழுத்துச் சிலுவையை போதும் என்று கூறி தனது எளிமையான வாழ்வு முறையைத் தொடர்ந்தார்.

புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கர்தினால்-வேட்பாளர்கள் கூடியிருந்த சிஸ்டைன் சிற்றாலயத்திற்குச் சென்று, அங்கு கர்தினால்கள் அளிக்கும் மரியாதையைப் பெற்றுக்கொள்வது வழக்கம். புதிய திருத்தந்தைக்கென்று ஓர் உயர்ந்த மேடையில் இடப்பட்ட அரியணையில் புதிய திருத்தந்தை அமர்ந்திருக்க, ஒவ்வொரு கர்தினாலும் அவர்முன் வந்து, முழந்தாள்படியிட்டு அவருடைய கை மோதிரத்தை முத்திசெய்து தம் மரியாதையையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவர். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸோ, தமக்கென்று போடப்பட்ட அரியணையில் அமராமல், பிற கர்தினால்களைப் போலவே நின்றுகொண்டு, அவர்கள் அளித்த மரியாதையை அன்புடன் ஏற்றுக்கொண்டார். எல்லாவற்றையும் விட வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் வெளி மேல்மாடத்தில் தோன்றி மற்றவர்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன்னர், தன்னை ஆசீர்வதிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தனக்காக அனைவரும் செபிக்கும்படி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எனக்காக செபிக்க மறக்கவேண்டாம்

அன்று முதல் இன்று வரை தன்னுடைய ஒவ்வொரு மறைக்கல்வி உரை, மூவேளை செப உரை, தனிப்பட்ட மற்றும் பொதுச்சந்திப்புக்களின் உரைகளின் இறுதியில் “எனக்காக செபிக்க மறக்கவேண்டாம்” என்று கூறுவதைத் தனது வழக்கமாகக் கொண்டவர். தனக்காக செபிக்க இறைமக்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கும் அதே நேரத்தில் போர், மோதல்கள், வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்படும் உலக மக்களுக்கு அமைதி கிடைக்கப்பெற  செபிக்க சிறப்பாக வலியுறுத்தி வருபவர்.  

கர்தினால்கள் அவை

தனது பன்னிரண்டு ஆண்டு பணிக்காலத்தில் இதுவரை 10 முறை கர்தினால்கள் அவையினை வழிநடத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு சபையின் முதல் திருத்தந்தையும், தென்அமெரிக்கக் கண்டத்தின் முதல் திருத்தந்தையுமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருஅவையை கடந்த 12 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக வழிநடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக உருவாக்கிய 21 கர்தினால்கள் உட்பட மொத்தம் 140 புதிய கர்தினால்களை திருஅவையில் உருவாக்கியுள்ளார். அவர்களில் இறுதியாக 2025ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று இணைக்கப்பட்டவர், 80 வயதுடைய வாக்காளிக்கும் உரிமை பெற்ற கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகா (Fernando Vérgez Alzaga) ஆவார்.

சுற்றுமடல்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தலைமைப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களுக்குள் தமது முதல் சுற்றுமடலை 2013 -ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் Lumen Fidei "நம்பிக்கை ஒளி" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது. 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வெளியிடப்பட்ட Evangelii Gaudium என்ற திருமடல், "Laudato Si" என்னும் இறைவா உமக்கே புகழ் என்ற ஏடு, Fratelli Tutti என்னும் நாமனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடல், “Desiderio desideravi” அதாவது, மிக மிக ஆவலாய் இருந்தேன்’, மற்றும் நான்காவது திருத்தூது மடலான ‘அவர் நம்மை அன்புகூர்ந்தார்' (Dilexit nos) என்ற திருத்தூது மடல் வரை அனைத்தும் மிக முக்கியம் வாய்ந்தவை. மேலும் குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாதம் 3, திங்கள்கிழமையன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் எடுத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

திருத்ததுப்பயணங்கள்

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15, ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் கோர்சிகா தீவுப்பகுதிக்கு ஒரு நாள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டது வரை ஏறக்குறைய 47 திருப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இது தவிர, இத்தாலி நாட்டிற்குள்ளும், உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் தன் மறைமாவட்டத்திற்குள்ளும் பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். 1480-ஆம் ஆண்டு திருமறைக்காக கொல்லப்பட்ட ஏறக்குறைய 800 மறைசாட்சிகள் உட்பட இதுவரை 942 இறையடியார்களை புனிதர்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2015ஆம் ஆண்டின் இறுதியில் இரக்கத்தின் யூபிலி ஆண்டை துவக்கிவைத்த திருத்தந்தை, இவ்வாண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் 2025ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாகக் கொண்டாட அழைப்புவிடுத்துள்ளார்.  2023, 2024 -ஆகிய ஆண்டுகளை யூபிலி ஆண்டிற்கான தயாரிப்பு ஆண்டுகளாகவும், 2025-ஆம் ஆண்டினை யூபிலி ஆண்டு கொண்டாட்ட ஆண்டாகவும் அறிவித்தார் திருத்தந்தை. அதிலும் குறிப்பாக 2023ஆம் ஆண்டை “சங்க ஏடுகள் கற்றல் ஆண்டு” என்றும், 2024-ஆம் ஆண்டை “இறைவேண்டல் ஆண்டு” என்றும், 2025 -ஆம் ஆண்டை “எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு” என்றும், வரையறுத்து சிறப்பிக்க அழைப்புவிடுத்தார்.

கடந்த  பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய்க்கென சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரைவில் பூரண உடல் நலம் பெற்று வத்திக்கான் திரும்பவும், தனது தலைமைத்துவப் பணியினைத் தொடர்ந்து ஆற்றவும் பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் தங்களது செபத்தினையும் கருத்தினையும் எடுத்துரைத்து வருகின்றனர்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மார்ச் 2025, 12:57