ஒப்புரவின் பாதையில் திருப்பயணிகள் நடைபோட உதவுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்த யூபிலி ஆண்டில் திருப்பயணிகளிடையே இரக்கத்தின் அருள்பணியாளர்களாகச் செயல்படும் திருஅவை அதிகாரிகள், ஒப்புரவு மற்றும் புதுப்பித்தலின் பாதையில் நடைபோட உதவுபவர்களாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தூது மன்னிப்பு அவை உரோம் நகரில் மார்ச் 24 முதல் 28 வரையில் ஏற்பாடுச் செய்திருந்த 35வது கல்வித் தொடரில் கலந்துகொள்வோருக்கென மார்ச் 27ஆம் தேதி செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு பெற்ற அருள்பணியாளர், மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்கும் பணியாளராக மாறுகிறார் என்பதை அதில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்”(யோவா 8.11) என மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தவர்களாக, அவரின் பணியை ஏற்று நடத்த நம் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளை ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டுச் செயல்படுவோம் என தன் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் அருளால் நம்மை இரக்கத்தின் பணியாளர்களாக நியமித்துள்ள இறைவனிடமிருந்து மன்னிப்பின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம் அதே கொடையை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முன்வருவோம் என தன் செய்தியில் விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெபத்தின் முக்கியத்துவத்தை அங்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, இனிப் பாவம் செய்யாதீர் என இயேசு கூறிய வார்த்தைகள், இந்த யூபிலி ஆண்டில் திருஅவை முழுவதும் எதிரொலித்து, ஒப்புரவின் வழி பிறக்கும் இதயங்களின் புதுப்பித்தலைக் கொணர்வதற்கும், புதிய உடன்பிறந்த உணர்வுக்கான பாதையைத் திறப்பதற்கும் உதவட்டும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இரக்கத்திற்கும் அமைதிக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இரக்கத்திலிருந்து பிறக்கும் உண்மையான அமைதி, நம்மை ஒருபோதும் ஏமாற்றாத எதிர்நோக்கைக் கொணர்கிறது என மேலும் தெரிவித்துள்ளார்.
இக்காலத்தில் திருத்தூது மன்னிப்பு அவையின் பணிகள் இன்னும் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்ற திருத்தந்தை, மன்னிப்பு அவை நீண்ட காலமாக திருத்தந்தையருக்கு உதவி வந்துள்ளதையும் தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்