MAP

திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12 ஆண்டுகள் நிறைவு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12 ஆண்டுகள் நிறைவு  (AFP or licensors)

திருஅவையின் தலைமைப் பதவியில் 12 ஆண்டுகள்

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை நாட்களில் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12ஆம் ஆண்டு நிறைவு மார்ச் 13, வியாழக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஜெமெல்லி மருத்துவர்களுடன் இணைந்து அதனைக் கொண்டாடியுள்ளார் திருத்தந்தை.

வியாழக்கிழமை மாலை ஒரு கேக்குடனும் மெழுகுதிரிகளுடனும் திருத்தந்தையின் அறைக்குள் சென்ற, அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவக்குழு, திருத்தந்தையோடு இணைந்து கேக் வெட்டி அந்நாளை சிறப்பித்துள்ளது.

தான் திருஅவையின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்த திருத்தந்தை, வத்திக்கானில் இடம்பெறும் தவக்கால ஆண்டு தியானத்திலும் காணொளி வழி கலந்து கொண்டார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை இரவு அவர் நன்முறையில் உறங்கியதாக வெள்ளி காலையில் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பகலில் ஆக்ஸிஜன் அதிக அளவில் பெற உதவும் சிகிச்சையும், இரவு ஓய்வின் போது, உடலில் துவாரம் உருவாக்காமல் மூக்கு வழியாக செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் துறை.

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியிலிருந்து ஒரு மாதமாக மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை நாட்களில் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறார்.

திருத்தந்தையின் உடல் நிலை குறித்த அடுத்த அறிக்கை, மார்ச் 14, வெள்ளி மாலையிலேயே வெளியிடப்படும் எனவும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2025, 13:20