இறை அருளுடன் இயற்கையைக் காப்போம்! - திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தத் தவக்காலத்தில் கடவுளின் அருளின் உதவியுடன், இயற்கையை நமது பேராசை சுரண்டலில் இருந்து விடுவிப்பதற்காக, நாம் அனைவரும் நமது நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மாற்றுவோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசிலில் நிகழும் உடன்பிறந்த உறவு குறித்த இவ்வாண்டுக்கான தவக்கால பரப்புரையை முன்னிட்டு, அதன் விசுவாசிகளுக்கு மார்ச் 05, புதன்கிழமை இன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, "சகோதரத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த சூழலியல்" மீது கவனம் செலுத்த விரும்பும் அதன் தலத்திருஅவைகுத் தனது ஆதரவையும் வழங்கியுள்ளார்.
சுற்றுச்சூழல் நெருக்கடியை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை தனது கடிதத்தில் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, Laudato si’, Laudate Deum ஆகிய தனது திருமடல்களில் தான் வலியுறுத்தியுள்ளபடி, சுற்றுச்சூழலை நோக்கிய அணுகுமுறைகளில் மாற்றம் காணவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பிரேசிலிய ஆயர்களின் சூழலியல் மீதான அர்ப்பணிப்பை இக்கடிதத்தில் பாராட்டியுள்ள திருத்தந்தை, வரவிருக்கும் COP 30 உச்சி மாநாட்டின் போது படைப்பைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கைப் பற்றி சிந்திக்கவும் அந்நாட்டின் விசுவாசிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்தத் தவக்காலத்தின் உண்ணா நோன்புப் பயணம் எதிர்நோக்கு, மனமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உறுதியான நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறி இந்தக் கடித்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்