MAP

இளையோர் இளையோர்  

அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது மிக அவசியம்

பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனையானது, போர்கள், காலநிலை மாற்றம், எரிசக்தி பிரச்சனைகள், தொற்றுநோய்கள், இடம்பெயர்வுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை ஒன்றிணைந்த வரலாற்றுச் சூழலை எழுப்புகிறது

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பயங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது அவசியமாகிறது என்றும், நமது வாழ்க்கைப்பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு என்றும் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 3, திங்கள்கிழமை வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உலகத்தின் முடிவா? நெருக்கடி, பொறுப்பு மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கியுள்ள திருத்தந்தை அவர்கள், வாழ்க்கை, நலவாழ்வுத்துறை மற்றும் குணப்படுத்துதல் துறை ஆராய்ச்சி நடவடிக்கையின் சில அடிப்படைக் கருத்துக்களை பற்றிய பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனையானது, போர்கள், காலநிலை மாற்றம், எரிசக்தி பிரச்சனைகள், தொற்றுநோய்கள், இடம்பெயர்வுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை ஒன்றிணைந்த வரலாற்றுச் சூழலை எழுப்புகிறது என்றும்,  வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை ஒரே நேரத்தில் தொடுகின்ற இந்த முக்கியமான பிரச்சனைகளின் பிணைப்பானது, உலகின் எதிர்கால நிலையையும் அதைப் பற்றிய நமது புரிதலையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அறிவியல்களின் குரலைத் தொடர்ந்து கேட்பது நமக்கு புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்நோக்கு ஏமாற்றத்தை நமக்குத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை என்றும், குறுகிய தனிப்பட்ட அளவைத் தாண்டிச் செல்கின்ற உண்மையான வாழ்க்கையை நோக்கி முழுஆற்றலுடன் செல்வதை உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் வரிகளான, எதிர்நோக்கு, ஒரே மக்களுடன் நம்மை இருத்தலியலில் ஒன்றிணைப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது, அதனை ஒவ்வொரு தனிநபரும் நமக்குள் மட்டுமே உணர முடியும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

உலகப் பொது நன்மை, பசி மற்றும் துயரத்தை ஒழித்தல், அடிப்படை மனித உரிமைகளின் உறுதியான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதிகாரம் கொண்ட மிகவும் பயனுள்ள உலக அமைப்புகளுக்கு நாம் தொடர்ந்து உறுதியுடன் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இத்தகைய உறுதியானது, மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைச் சார்ந்து இல்லாத ஒரு பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது, நிலையான செயல்திறனைக் கொண்டிருக்கின்றது எனவே இது அனைத்து மனிதகுலத்தையும் பற்றிய ஒரு அவசரப் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 15:32