MAP

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் குருத்துவ அருள்பொழிவு திருச்சடங்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் குருத்துவ அருள்பொழிவு திருச்சடங்கு   (Vatican Media)

இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்வோம் - திருத்தந்தை

“இளைஞர்கள் தங்கள் இறையழைத்தலை செபம், அமைதி மற்றும் நற்சிந்தனைகள் வழியாகத் தெளிந்து தேர்ந்து, கடவுள் தங்களை வழிநடத்துகிறார் என்பதை நம்ப வேண்டும்” : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

இறையழைத்தல் என்பது கடவுள் நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை என்றும், நம்மையே இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே மாதம் 11-ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் 62-வது உலக இறையழைத்தல் நாளுக்கென, மார்ச் 19, புதன்கிழமை இன்று, வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்யவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

திருஅவையில் உள்ள ஒவ்வோர் இறையழைப்பும், அது பொதுநிலையினராக இருந்தாலும், திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளராக இருந்தாலும், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டவராக இருந்தாலும், கடவுள் இந்த உலகத்திற்கும் அவருடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

தாங்கள் பெற்றுள்ள இறையழைத்தலை கடவுளிடமிருந்து கிடைத்த விலைமதிப்பற்ற ஒரு கொடையாகவும், நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நிறைவிற்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் கருதுமாறு இளையோருக்குத் தனது செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.

பாதுகாப்பின்மை, தனித்தன்மைக் குறித்த நெருக்கடிகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் உள்ளிட்ட இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒப்புக்கொண்டுள்ள அதேவேளையில், இந்தப் போராட்டங்கள் இருந்தபோதிலும் அவர்களுடன் கடவுள் இருக்கிறார் என்றும், அவர்களை அன்புகூர்கிறார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.

இளைஞர்கள் தங்கள் இறையழைத்தலை செபம், அமைதி மற்றும் நற்சிந்தனைகள் வழியாகத் தெளிந்து தேர்ந்து, கடவுள் தங்களை வழிநடத்துகிறார் என்பதை நம்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்  திருத்தந்தை.

ஒவ்வோர் இறையழைப்பும், அது பொதுநிலையினராக இருந்தாலும், திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளராக இருந்தாலும், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டவராக இருந்தாலும், நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது என்றும்,  மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் பொது நன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இளைஞர்களின் இறையழைத்தல் பயணங்களில், பொறுமையுடனும் ஞானத்துடனும் அவர்களை ஆதரிக்கவும், திருஅவைக்கும் குறிப்பாக, வயதுமுதிர்ந்த உறுப்பினர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.

ஓர் ஆதரவான சூழலில் வளரும் இறையழைத்தலை வளர்ப்பதில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, எதிர்நோக்கின்  சாட்சிகளாக இருக்கவும், திருஅவையில் புதிய இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

இறுதியாக, இளைஞர்களின் முயற்சிகளை திருஅவையின் அன்னையாம் புனித கன்னி மரியாவின் பரிந்துரையின் கீழ் ஒப்படைத்து, தனது ஆசீரையும் வழங்கி உலக இறையழைத்தல் நாளுக்கான செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மார்ச் 2025, 15:18