MAP

திருப்பலியின்போது திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பலியின்போது திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்   (ANSA)

குரலற்றவர்களும் கடவுளின் திட்டத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் வாழ்வுக்கான இயக்கத்தார், பெண்கள் மற்றும் மக்களுக்குச் செய்த பணிகள் எதிர்நோக்கின் அடையாளங்களாக, காலத்தால் அழியாமல் இருக்கும் என்றும், நன்மையின் விளைவுகளையும், பலன்களையும் அது நிகழ்காலத்தில் மட்டுமன்று எதிர்காலத்திலும் கொண்டுவரும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் தூயவர்கள், அவர்கள் கடவுளின் பெரிய அழகான திட்டத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்றும், கருவில் இருக்கும் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் போன்ற குரலற்றோரை சமுதாயத்தில் இருந்து நீக்குவதன் வழியாக ஒரு நியாயமான சமுதாயத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மார்ச் 8, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வாழ்வுக்கான இயக்கத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பெண்களின் விருந்தோம்பல், தாராள மனப்பான்மை, துணிவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதைத் தொடர வேண்டும் என்றும், வாழ்க்கைக்கான  உதவி மையங்கள் அனைவருக்கும் ஓர் அடையாளமாக மாறும்போது பெண்கள் அரசு மற்றும் திருஅவை சமூகத்தின் ஆதரவை நம்ப முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் வாழ்க்கைக்கான இத்தாலிய இயக்கம் ஆற்றிவரும் பணியின் முக்கியத்துவத்தைத் தான் நன்கு அறிவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், உறுதியான ஒன்றிப்பு, உடனிருப்பு, மகப்பேறு காலத்தில் துன்புறும் அன்னையர்களுக்கு அளிக்கும் நெருக்கம் போன்றவற்றின் வழியாக வாழ்வுக்கான இயக்கமானது வாழ்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மை, அன்பு மற்றும் விடாமுயற்சியுடன் வாழ்வுக்கான மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றுங்கள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், பிறரன்புப்பணிகளின் வழியாக உண்மையை உறுதியாகப் பற்றிக்கொண்டு அதனைப் பிறரிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 50 ஆண்டு காலத்தில் சில கருத்தியல் தப்பெண்ணங்கள் குறைந்து, இளைஞர்களிடையே படைப்பின் மீதான அக்கறையின் உணர்திறன் வளர்ந்துள்ளது என்றாலும், தூக்கி எறியும் கலாச்சாரமும் பரவியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், மனித வாழ்க்கையின் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்கின்ற ஒவ்வொரு நிலை வயதினரும் அதிக அளவில் தேவைப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் தூயோர், அவர்கள் கடவுளின் பெரிய அழகான திட்டத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்றும், பிறக்காத குழந்தைகள், தன்னிச்சையாக செயல்பட முடியாத முதியோர், குணப்படுத்த முடியாத நோயாளர் போன்ற குரலற்றோரை நீக்குவதன் வழியாக ஒரு நியாயமான சமுதாயத்தை உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

வரலாற்றின் பக்கங்களில் வாழ்வுக்கான இயக்கத்தார், பெண்கள் மற்றும் மக்களுக்குச் செய்த பணிகள் எதிர்நோக்கின் அடையாளங்களாக, காலத்தால் அழியாமல் இருக்கும் என்றும், நன்மையின் விளைவுகளையும், பலன்களையும் அது நிகழ்காலத்தில் மட்டுமன்று எதிர்காலத்திலும் கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்க்கைக்கான உலக இயக்கங்களின் ஆன்மிகத் தலைவரான கல்கத்தாவின் புனித தெரசாவின் பரிந்துரையில் இயக்கத்தார் ஒவ்வொருவரையும், குழுக்களையும் அர்ப்பணித்து செபிப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்றும் அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மார்ச் 2025, 14:00