அல்பேனிய பேராயர் ஜொவானிக்கு திருத்தந்தையின் வாழ்த்து
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒப்படைக்கப்பட்ட மந்தையாம் மக்களை வழிநடத்தும் பணியில், தூய ஆவியின் கொடைகளை பேராயர் ஜொவானி அவர்களுக்கு, எல்லா நன்மைகளுக்கும் அடிப்படையான இறைத்தந்தை வழங்க, தான் செபிப்பதாக எடுத்துரைத்து வாழ்த்துச் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 29, சனிக்கிழமை டிரானா, துர்ஸ் மற்றும் அல்பேனிய உயர்மறைமாவட்டப் பேராயராக உயர்த்தப்பட்டிருக்கும் பேராயர் ஜொவானி அவர்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டு வாழ்த்துச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வு மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் கொண்டு வாழ்ந்து, மறைந்த அல்பேனிய பேராயர் அனஸ்தாஸின் வழித்தோன்றலாகப் பணிகளைச் செய்யவும் வாழ்த்தியுள்ளார்.
அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் மறைந்த முன்னாள் பேராயர் அனஸ்தாஸ், தனது பணிக்காலத்தின்போது வெவ்வேறு தலத்திருஅவைகள் மற்றும் துறவற மரபுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான மற்றும் இணக்கமான வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல்வேறு செயல்களின் வழியாக தன்னை வேறுபடுத்திக் காட்டியவர் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
தலத்திருஅவைகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் பேராயர் அனஸ்தாஸ் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், பேராயரின் முன்மாதிரியைப் பின்பற்றி வாழும்போது, வேறுபாடுகளைக் கடந்து செல்லுதல், கிறிஸ்துவின் அனைத்து சீடர்களிடையேயும் முழுமையான ஒற்றுமைக்கான தேடலை ஊக்குவித்தல் போன்றவற்றிற்கு ஒரு வழிமுறையாக உரையாடலை நம்மில் தொடர்ந்து வளர்க்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த கடினமான காலங்களில், கிறிஸ்தவர்கள் ஒற்றுமைக்கு உறுதியான சான்றளிப்பது மிகவும் அவசரமானது என்றும், இதன் வழியாக, உலகம் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஒன்றிப்பையும், அமைதியின் நற்செய்தியையும் முழுமையாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இறைத்தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றிணைந்து செயல்படும்போது, அல்பேனியா தலத்திருஅவைக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையிலான உறவுகள் மேலும் வளரும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நற்செய்தியை அறிவிப்பதில் புதிய வடிவிலான பயனுள்ள ஒத்துழைப்பை நாடுதல், தேவையிலிருப்பவர்களுக்குப் பணியாற்றுதல், உரையாடல் வழியாக நம்மைப் பிரிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பித்தல் போன்றவை இதனால் சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்