MAP

சாந்தா மார்த்தா கட்டிடம் சாந்தா மார்த்தா கட்டிடம் 

நிலஅதிர்ச்சிக்கு உள்ளான மியான்மாருக்காக திருத்தந்தை செபம்

திருத்தந்தையின் அண்மை இரத்த பரிசோதனை முடிவுகள் நன்முறையில் உள்ளன. மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன் நெருங்கிய உடனுழைப்பாளர்களை மட்டுமே அவர் சந்தித்து வருகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூச்சு விடுவதிலும், சிரமமின்றி பேசுவதிலும் ஓரளவு முன்னேற்றம் கண்டுவருவதாகவும், அவருக்கு மூக்கின் வழியாக செயற்கையாக ஆக்சிஜன் வழங்குவது பகல் நேரங்களிலும் இரவிலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.

38 நாட்கள் மருத்துவமனையில் மூச்சுகுழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்று தற்போது வத்திக்கானின் சந்தா மார்த்தா இல்லத்தில் ஓய்வு எடுப்பதோடு சிகிச்சையும் பெற்றுவரும் திருத்தந்தையின் உடல்நிலை குறித்து மார்ச் 28 நண்பகலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம்.

கடந்த புதனன்று, அதாவது மார்ச் 26ஆம் தேதி எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனை முடிவுகள் நன்முறையில் இருப்பதாகவும், அவர் மருத்துவப் பணியாளர்கள், தன் செயலர்கள் மற்றும் தன் நெருங்கிய உடனுழைப்பாளர்களை மட்டுமே சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஓய்வில் இருக்கும் இந்நேரத்தை ஜெபம், மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் சில முக்கிய அலுவல்களைக் கவனிப்பது என்பதில் செலவிட்டு வருவதாகவும் திருப்பீடத்தின் அறிக்கை உரைக்கிறது.

மியான்மார் நாட்டில் இடம்பெற்ற நில அதிர்ச்சி குறித்து திருத்தந்தைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் இறைவேண்டல் செய்து வருவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா கட்டிடத்தில் உள்ள சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் ஏனைய உடனுழைப்பாளர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2025, 14:54