MAP

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இயேசு சபையில் 67ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்!

மார்ச் 11, செவ்வாய்க்கிழமை நேற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு சபையில் சேர்ந்ததன் (மார்ச் 11, 1958) 67-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளை, அவர் விரைவில் உடல்நலம் பெறவேண்டி செபமாலை செபிக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் முழுவதும் அதிக அளவிளான ஆக்ஸிஜனேற்ற சிகிச்சைமுறை வழங்கப்பட்டது என்றும், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நிகழ்ந்துவரும் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கான தவக்கால ஆண்டுத் தியானத்தில் அவர் காணொளி வழியாகப் பங்குபெற்றார் என்றும், மார்ச் 11, செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மருத்துவ நிலைமை சீராக உள்ளது என்றும், அவரது உடல்நிலையில் ஏற்பட்டுவரும் சிறிய அளவிலான முன்னேற்றங்களை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை.

மேலும் அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையைக் கருத்தில் கொண்டு, முந்தைய நாட்களைப் போல நேற்று மாலை விரிவான மருத்துவ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இயேசு சபையில் 67 ஆண்டுகள்

மார்ச் 11, செவ்வாய்க்கிழமை நேற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு சபையில் சேர்ந்ததன் (மார்ச் 11, 1958) 67-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும், நேற்று காலையில் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கான தவக்கால ஆண்டுத் தியானத்தில் காணொளி வழியாகப் பங்கேற்றது போலவே, பிற்பகலிலும் அவர் பங்கேற்றார் என்றும் தெரிவிக்கும் அவ்வறிக்கை, அவர் விரைவில் உடல்நலம் பெறவேண்டி அனைவரும் மாலையில் செபமாலை செபித்தனர் என்றும் உரைக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேற்று காலையில் மருத்துவமனையில் தனக்கென அமைந்துள்ள சிற்றாலயத்தில் திருநற்கருணையைப் பெற்றார் என்றும், தொடர்ந்து தவக்கால ஆண்டுத் தியானத்தின் ஒருபகுதியாக தியானத்திலும் இறைவேண்டலிலும் ஈடுபட்டார் என்றும் கூறுகிறது அதன் அறிக்கை.

மார்ச் 12, புதன்கிழமையன்று, மருத்துவர்கள் திருத்தந்தையின் உடல்நிலைக் குறித்து கூடுதல் தகவல்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அவரது உடல்நலம் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேறி வருவதால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீவிரச் சிகிச்சை கண்காணிப்பு வளையம் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

மார்ச் 12, புதன்கிழமை அறிக்கை

மார்ச் 12, புதன்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 11, செவ்வாய்க்கிழமை நேற்று வழக்கம்போல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மார்ச் 2025, 09:58