உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் காணும் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுவாச உடலியக்க சிகிச்சை முறைகள் மற்றும் செயற்கை ஆக்சிஜன் வழங்கும் முறையில் சிறிதளவு முன்னேற்றங்கள் இருப்பதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
மார்ச் 21, வெள்ளிக்கிழமை மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலை குறித்து செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவில் செயற்கை ஆக்சிஜன் வழங்கும் முறையைப் பயன்படுத்தவில்லை என்றும், அதற்கு மாற்றாக, மூக்கு வழியாக வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜன் சிகிச்சை முறையைப் பெற்று வருகின்றார் என்றும் கூறியுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை முழுவதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சைகள், இறைவேண்டல், சிறிதளவு பணிகள் போன்றவற்றிற்காகத் தனது நாளைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.
மார்ச் 21, வெள்ளிக்கிழமையன்று, பார்வையாளர்கள் யாரையும் திருத்தந்தை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளத் திருப்பீடத் தகவல் தொடர்பகம், ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையானது கடந்த வாரங்களைப் போலவே எழுத்துப்படிவத்தில் வழங்கப்படும் என்றும், திருத்தந்தையின் மருத்துவ அறிக்கை குறித்த செய்திகள் மார்ச் 24, திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்