திருத்தந்தையின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சில காலம் தேவைப்படுவதாகவும் திருப்பீடத்தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
மார்ச் 14, வெள்ளிக்கிழமை இரவு திருத்தந்தையின் உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருப்பீடத் தகவல் தொடர்பகமானது, ஒவ்வொரு நாளும் காலையில் திருத்தந்தை இரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்ததாக அறிவிக்கப்படும் செய்தியானது, திருத்தந்தையின் தொடர் உடல்நிலை முன்னேற்றம் கருதி இனி வெளியிடப்படாது, மாறாக மாலையில் மட்டுமே செய்தி வெளியிடப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளது.
கடந்த சில நாள்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது என்றும், மிக மெதுவாகவே உடல்நிலையானது முன்னேற்றம் அடைந்தாலும் இது நேர்மறையான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல், ஏறக்குறைய ஒரு மாதம், மூச்சுக்குழாய் அழற்சி நோய் சிகிச்சைக்கென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை குறித்து காலை, மாலை என இருவேளைகளில் செய்திகளை வழங்கி வரும் திருப்பீடத் தகவல் தொடர்பகமானது, மார்ச் 14, வெள்ளிக்கிழமை முதல், மாலை மட்டுமே திருத்தந்தையின் உடல்நிலை குறித்த செய்திகளை வெளியிடும் என்றும், சனிக்கிழமை (மார்ச் 15) மாலை வெளியிடப்படும் அறிக்கை வழக்கம் போல் தெரிவிக்கப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 14, வெள்ளிக்கிழமை காலையில் சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறைகளையும், செயற்கை ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறையையும் பெற்றார் என்றும், மதிய நேரத்தை செபத்திற்காக அர்ப்பணித்தார் என்றும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்