புதன் மறைக்கல்வி உரை – இயேசுவைக் கோவிலில் தேடிக் கண்டடைதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒவ்வொரு புதன்கிழமையும் உலகெங்கிலும் இருந்து கூடி வரும் இறைமக்களை குழுக்களாக புதன் மறைக்கல்வி உரையின்போது வத்திக்கானில் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று மார்ச் 5, புதன்கிழமை இயேசுவைக் கோவிலில் தேடிக் கண்டடைதல் என்னும் தலைப்பின் கீழ் தனது கருத்துக்களை எழுத்து வடிவப்படிவமாக வழங்கியுள்ளார்.
தவக்காலத்தின் முதல் நாளும், திருநீற்றுப்புதனுமாகிய இன்று சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போய் மீண்டும் கண்டடைந்த நிகழ்வு பற்றியக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எழுத்து வடிவப் படிவமாக வழங்கியுள்ளார் திருத்தந்தை. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் தொடர்ந்து வழங்கி வந்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்த இறுதித் தலைப்பாக, காணாமல்போன சிறுவன் இயேசு எருசலேம் ஆலயத்தில் தேடிக் கண்டறியப்பட்ட நிகழ்வினை முன்னிறுத்தி தனது கருத்துக்களை வழங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் நுரையீரல் தொடர்பான நோய்த்தொற்று சிகிச்சைகளை உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நிலையில் சிறிதளவு முன்னேற்றம் இருந்து வரும் நிலையில், தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வி உரையை முன்னதாக தயாரித்து எழுத்துவடிவப் படிவமாக வழங்கியுள்ளார்.
லூக்கா 2: 46,48-50
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள்:
அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
இயேசுவின் குழந்தைப் பருவத்தில் இறுதியாக இடம்பெறும் பகுதியான 12 வயது சிறுவன் இயேசு, தனது பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் ஆலயத்தில் தங்கிய நிகழ்வினை இன்றைய நம் மறைக்கல்விக்காக எடுத்துக்கொள்வோம். விழா நாள்கள் முடிந்து இயேசுவின் பெற்றோர் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமிலேயே தங்கிவிடுகின்றார். ஒருநாள் பயணம் முடிந்த பின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடுகின்றனர். அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்ற அவர்கள், மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டடைகின்றார்கள். இந்த நிகழ்வானது இயேசுவிற்கும் அன்னை மரியாவிற்கும் இடையில் நடந்த மிக சுவாரசியமான உரையாடலை நமக்கு முன்வைக்கின்றது. இயேசுவின் தாயான அன்னை மரியாவின் கடினமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி சிந்திக்க நமக்கு உதவுகின்றது. உண்மையில், மரியா ஓர் ஆன்மிக பயணத்தை மேற்கொண்டார், அப்பயணத்தில் அவர் தனது மகனின் வாழ்க்கை மறைபொருள் பற்றிய புரிதலில் முன்னேறுகின்றார்.
மரியாவின் பயணத்தின் பல்வேறு கட்டங்களை நாம் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். கருவுற்றக் காலத்தின் ஆரம்பத்தில், மரியா எலிசபெத்தைச் சந்திக்க சென்றார், திருமுழுக்கு யோவான் பிறக்கும் வரை மூன்று மாதங்கள் அவருடனே தங்கி இருந்தார். அதன்பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பின் காரணமாக, தனது ஒன்பதாம் மாதத்தில் கணவர் யோசேப்புடன் பெத்லகேமுக்குச் செல்கிறார், அங்கு இயேசுவைப் பெற்றெடுக்கிறார். நாற்பது நாட்களுக்குப் பிறகு குழந்தையைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக எருசலேம் ஆலயத்திற்குச் செல்கின்றார். பின்னர் ஒவ்வோர் ஆண்டும் குடும்பமாக எருசலேம் கோவிலுக்கு திருப்பயணம் மேற்கொள்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோதிடமிருந்து பாதுகாக்க நீண்ட காலமாக எகிப்தில் தஞ்சம் புகுந்தார். அரசனின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் மீண்டும் நாசரேத்தில் குடியேறுகின்றனர். இளைஞரான இயேசு தனது பணி வாழ்வைத் துவக்கியபோது, அதாவது கானாவூர் திருமணத்தின்போது, அன்னை மரியா அங்கு நிகழ்ந்த முதல் அற்புத நிகழ்வின் முக்கிய நபராக உடன் இருக்கின்றார். எருசலேம் நோக்கிய இயேசுவின் இறுதிப்பயணம் வரை, அவரது பாடுகள் மரணம் வரை, அவரை தொலைவில் நின்று பின்தொடர்கின்றார். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, மரியா சீடர்களின் அன்னையாக எருசலேமில் இருக்கிறார், தூய ஆவியின் வருகைக்காக சீடர்கள் காத்திருக்கும்போது அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகின்றார்.
தனது வாழ்க்கைப் பயணம் முழுவதும், கன்னிமரியா எதிர்நோக்கின் திருப்பயணியாக தனது மகனின் மகளாக, முதல் சீடராக மாறுகிறார். மரியா இயேசுவை மனித குலத்திற்கான எதிர்நோக்காகக் கொண்டு வந்தார். அவருக்கு பாலூட்டி உணவூட்டி வளர்த்தார். அவரைப் பின்தொடர்ந்தார், கடவுளின் வார்த்தை முதலில் தன்னை வடிவமைக்க அனுமதித்தார். திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறியது போல், “மரியா உண்மையில் தனது இல்லத்தில் இருக்கிறார், அதிலிருந்து வெளியேறி இயல்பாக மீண்டும் அதில் நுழைகிறார், இறைவார்த்தையுடன் உரையாடுகின்றார், சிந்திக்கிறார். அவருடைய எண்ணங்கள் கடவுளின் எண்ணங்களுடன் ஒத்துப்போகின்றன, அவருடைய விருப்பம் கடவுளுடன் இணைந்த ஒரு விருப்பம் என்பது வெளிப்படுகிறது. கடவுளின் வார்த்தையால் நெருக்கமாக ஊடுருவி, மனுவுருவான வார்த்தையின் தாயாக மாறுகின்றார்”. கடவுளின் வார்த்தையுடனான இந்த தனித்துவமான தொடர்பு, ஒரு கடினமான “பயிற்சி” முயற்சியை அன்னை மரியாவிற்குக் கொடுக்காமல் இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் எருசலேமிற்குச் செல்லும் அவர்களின் பயணமானது, இம்முறை, இயேசுவின் 12-ஆவது வயதில் அவர் காணாமல் போனது மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்த மகனை எப்படியாவது திரும்ப அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், யோசேப்பிற்குப் பதிலாகவும் பேசுகின்றார் மரியா. “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக். 2:48). என்கின்றார். மரியாவும் யோசேப்பும் ஒரு குழந்தையை இழந்த பெற்றோரின் வலியை அனுபவித்தனர். இயேசு பயணிகளின் கூட்டத்தில் இருப்பார் என்று அவர்கள் இருவரும் நம்பினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே அவரைத் தேடுகின்றனர். அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் செல்கின்றனர். கோவிலுக்குத் திரும்பிய அவர்கள், இதுவரை தங்கள் பார்வையில் பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தையாக இருந்தவர், திடீரென்று வளர்ந்தது போல், இப்போது போதகர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் மறைநூல்களைப் பற்றிய விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றனர்.
இயேசு தனது தாயின் கண்டிப்பிற்கு முன்னால், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக். 2:49) என்று அன்பற்ற எளிய பதிலினை அளிக்கிறார். மரியாவும் யோசேப்பும், இயேசு என்ன சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. கடவுளால் படைக்கப்பட்ட இறைக்குழந்தையின் மறைபொருள் அவர்களது அறிவாற்றலை மிஞ்சுகின்றது. ஒருபுறம் பெற்றோர், அந்த மிக அருமையான குழந்தையை தங்கள் அன்பின் சிறகுகளின் கீழ் பாதுகாக்க விரும்புகிறார்கள்; மறுபுறம், இயேசுவோ, இறைத்தந்தையின் மகனாக, அவரது பணியில் நின்று, அவரது இறைவார்த்தையில் மூழ்கி வாழ்கிறார்.
லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் அன்னை மரியாவின் கடைசி வார்த்தைகளுடனும் நிறைவடைகின்றன. இயேசு எடுத்துரைத்த “என் தந்தையின் இல்லம்” என்ற வார்த்தைகள் யோசேப்பு, இயேசுவிற்கு வளர்ப்புத்தந்தை என்ற தந்தைத்துவப் பண்பை நினைவுபடுத்துகின்றன. மேலும் இந்த தந்தை வழியானது, அவரது விண்ணகத் தந்தையிடமிருந்து உருவாகிறது என்பதை இயேசு ஒப்புக்கொள்கிறார், அவருடைய மறுக்க முடியாத முதன்மையை அவர் அங்கீகரிக்கிறார். அன்புள்ள சகோதர சகோதரிகளே, மரியா மற்றும் யோசேப்பைப் போல, எதிர்நோக்குடன் நாமும் இறைவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்