அன்னை மரியாவிற்கு நன்றி தெரிவித்து மலர்க்கொத்து அளித்த திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தூதுப் பயணம் தொடங்குவதற்கு முன்பும் முடிந்து திரும்பும் வழியிலும் உரோம் நகர் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவில் சென்று செபிக்கும் வழக்கமுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 38 நாள்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பும்முன் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னைக்கு நன்றி தெரிவித்தார்.
மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை உரோமையில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திரும்புவதற்கு முன் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னையின் திருஉருவத்திற்கு முன் அர்ப்பணிக்குமாறு மலர்க்கொத்து ஒன்றினை வழங்கினார்.
நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறி வாழ்த்தி ஆசீர் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து வாகனத்தில் பயணித்து மேரி மேஜர் பெருங்கோவில் வந்து சேர்ந்தார். அங்கு வாகனத்தில் இருந்தபடியே அப்பெருங்கோவிலின் வாரிசுரிமை தலைமைக்குருவான, கர்தினால் Rolandas Makrickas என்பவரிடம் கர்மேலா என்ற பெண்மணி கொடுத்த மஞ்சள் நிற மலர்க்கொத்தை அன்னையின் திரு உருவத்திற்கு முன் அர்ப்பணிக்கக் கேட்டுக்கொண்டார்.
78 வயது நிரம்பிய கர்மேலா மன்குசோ என்ற பெண்மணி இத்தாலியின் கலாபிரியா பகுதியைச் சார்ந்தவர். வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் அருகே மோந்தே வெர்தே பகுதியில் வசிக்கும் அவர் ஒவ்வொரு நாளும் ஜெமெல்லி மருத்துவமனை வந்து திருத்தந்தைக்காக செபிக்கும் மக்களில் ஒருவராவார். மஞ்சள் நிற மலர்க்கொத்துக்கள் ஒளியின் அடையாளம், எனவே திருத்தந்தை நல்ல உடல் சுகம் பெற்று திரும்பி வரவேண்டும் என்பதற்காக, மஞ்சள் நிறப் பூக்களைத் தான் கொண்டு வந்ததாக வத்திக்கான் செய்தியாளார்களிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்