MAP

சிறப்பு செபமாலையின்போது கர்தினால் Fernandez சிறப்பு செபமாலையின்போது கர்தினால் Fernandez  (ANSA)

திருத்தந்தையின் உடல் நலத்திற்காக ஐந்தாவது நாளாக சிறப்பு செபமாலை

மார்ச் 1, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு திருத்தந்தையின் உடல் நலத்திற்காக செபிக்கப்பட இருக்கும் சிறப்பு செபமாலையானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் நடைபெற இருக்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உடல் நோய், வறுமை மற்றும் போரினால் துன்புறுபவர்களுக்காக செபிக்கும் இதயம் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நலத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தைக்காக ஏறெடுத்த செபமாலையின் துவக்கத்தில் கூறினார் கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ்.

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக சிறப்பு செபமாலையானது ஐந்தாவது நாளாக பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணியளவில் இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு செபமாலையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் குணமடைய செபிக்கும்படி வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார், செபமாலைக்குத் தலைமையேற்று வழிநடத்திய விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ்.

துன்புறும் மக்களை எப்போதும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்பதை தனது இதயத்தில் கொண்டுள்ள திருத்தந்தை அவர்களுக்காக செபிக்கும் இந்நேரத்தில் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம், அன்னை மரியின் அருளினை நாடுவோம் என்று கூறினார் கர்தினால் பெர்னாண்டஸ்.

தயவு செய்து எனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்பதைத் தனது ஒவ்வொரு மூவேளை செப உரை, புதன் மறைக்கல்வி உரை மற்றும் பொதுச்சந்திப்புக்களின் முடிவில் எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபிக்க, வத்திக்கான் வளாகத்தில் மக்கள் ஐந்தாவது நாளாக நம்பிக்கையுடன் ஒன்றுகூடினர்.

துயர மறையுண்மைகளை தியானித்து திருத்தந்தைக்காக ஒப்புக்கொடுத்து செபிக்கப்பட்ட இச்சிறப்பு செபமாலையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர், சிலர் கையில் மெழுகுதிரிகளை ஏந்தியும், மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செபமாலை செபித்தும் தங்கள் வேண்டுதல்களை இறைத்தந்தையை நோக்கி எடுத்துரைத்தனர்.

கர்தினால்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் என பல நாடுகளைச் சார்ந்த மக்கள் ஒருமித்த குரலில் திருத்தந்தையின் உடல் நிலைக்காக செபமாலை செபித்தனர். ஆறாவது நாளாக மார்ச் 1, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் சிறப்பு செபமாலையானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலுக்குள் நடைபெற இருக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மார்ச் 2025, 13:11