MAP

திருத்தந்தையின் உடல் நலத்திற்காக செபித்த சிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிப்ரவரி 14 ஆம் நாள் முதல், இன்று வரை அவரது உடல் நலத்திற்காக தங்களது செப உணர்வுகளையும் அன்பையும் வெளிப்படுத்தி ஒவ்வொரு நாளும் ஏராளமான கடிதங்கள் ஜெமெல்லி மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஜெமெல்லி மருத்துவமனையின் முன்பு உள்ள புனித இரண்டாம் ஜான் பால் திருஉருவத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலத்திற்காக சிறப்பு செபத்தை ஏறெடுத்தனர் சிறார்.

மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை உலக குழந்தைகள் நாளுக்கான ஒருங்கிணைப்பாளர் அருள்பணி என்சோ ஃபொர்த்துனோ அவர்களின் வழிநடத்துதலில், கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான சன் எஜிதியோ, அமைதிப்பள்ளி, திருச்சிலுவைப்பள்ளி, கத்தோலிக்கப் பள்ளிகள், சாரணர் இயக்கம், இத்தாலியில் உள்ள புத்தமதத்தினர் என பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்த சிறார் ஜெமெல்லி மருத்துவமனை முன்பு ஒன்று கூடினர்.

கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரைவில் நல்ல உடல் நலம் பெற வேண்டி தங்களது செபங்களையும் விண்ணப்பங்களையும் எடுத்துரைத்த சிறார் ஓவியங்கள்,  வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், மலர்கள், மெழுகுதிரிகள் போன்றவற்றை மருத்துவமனை முன்புறம் உள்ள புனித இரண்டாம் ஜான் பால் திரு உருவத்திற்கு முன்பாக அர்ப்பணித்து செபித்தனர்.    

இத்தகைய செயல்கள் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தங்களது மென்மையையும் அன்பையும் அருகிருப்பையும் சிறார் வெளிப்படுத்தினர். மேலும், ஜெமெல்லி திருஇருதய பல்கலைக்கழகத்தின் திருஅவைசார் பொது உதவியாளரான ஆயர் CLAUDIO GIULIODORI அவர்களுடன், குழந்தைகள் குழுவினர், ஜெமெல்லி மருத்துவமனையின் உள்புறம் உள்ள ஆலயத்திற்குள் சென்று அன்னை மரியின் முன்பாக மலர்களையும் திருத்தந்தைக்கான வாழ்த்துக்களையும் அர்ப்பணித்து செபித்தனர்.

விரைவில் திரும்பி வாருங்கள் திருத்தந்தையே, அன்புள்ள திருத்தந்தையே என்ற முழக்கங்களை ஒருமித்து எடுத்துரைத்த சிறார், "அன்னை மரியே திருத்தந்தைக்கு நலம் அளியுங்கள்" என்று ஒருமித்து செபித்தனர்.

கையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பலூனுடன் ஏறக்குறைய 300 சிறார் மருத்துவமனை முன்பாக திருத்தந்தைக்காக செபிக்கக் கூடியிருந்த வேளையில் “குழந்தைகளே திருத்தந்தை உங்களை அன்பு செய்கின்றார், உங்களை எப்போதும் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றார்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூவேளை செப உரைக் கருத்துக்களை அருள்பணியாளர் என்சோ அவர்கள் வாசித்ததைக் கேட்டதும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் உரத்த குரல் எழுப்பினர் சிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிப்ரவரி 14 ஆம் நாள் முதல் இன்று வரை அவரது உடல் நலத்திற்காக தங்களது செப உணர்வுகளையும் அன்பையும் வெளிப்படுத்தி ஒவ்வொரு நாளும் ஏராளமான கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. உலகெங்கிலும் இருந்து இத்தாலிய தபால் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கும் கடிதங்களின் அளவு 150 கிலோவை எட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மார்ச் 2025, 13:51