திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் தலைவராகப் பொறுப்பெற்ற 12-ஆம் ஆண்டு நிறைவு
மெரினா ராஜ் - வத்திக்கான்
அன்பு நேயர்களே 2013 மார்ச் 19 அன்று கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்று, இயற்கை ஆர்வலரான தூய பிரான்சிஸ் அசிசியின் பெயரைத் தனது பெயராக ஏற்று, அவரைப்போலவே எளிய மனிதராக, நல்ல ஆயனாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று மார்ச் 19 புதன்கிழமை தலைமைப் பொறுப்பேற்ற பன்னிரண்டு ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடுகின்றார். எனவே இன்றைய நமது நிகழ்வில் திருத்தந்தையின் பயணங்கள், உலக ஆயர் மாமன்றங்கள் யூபிலி ஆண்டுகள், செப விண்ணப்பங்கள் என தனது பணிக்காலத்தில் அவர் ஆற்றிய செயல்கள் குறித்தக் கருத்துக்களைக் காண இருக்கின்றோம்.
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனெ உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை அவர்கள், தனது தலைமைப் பதவியின் பன்னிரண்டாம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கின்றார். அருள்பணியாளராக, பேராயராக, கர்தினாலாகப் பணியாற்றியபோதிலிருந்தே மிகவும் எளிய மனிதராக தனது மந்தையின் கீழ் இருக்கும் மக்களோடு மிக எளிமையாகப் பழகும் குணம் படைத்தவர். நல்ல ஆயன் தனது மந்தையின் தேவைகளை உணர்ந்து செயல்படுவார். “நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” (யோவான் 10: 15) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க திருஅவையின் மக்களாகிய நமக்கு நல்ல ஆயனாக இருந்து நம்மை நாளும் வழிநடத்தி வருபவர். தந்தையாம் இறைவனின் அருளையும் இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும் தனது சொல்லாலும் செயலாலும் எடுத்துரைத்து வருபவர் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தையாகவும், புனித பிரான்சிஸ் அசிசியின் பெயரைத் தாங்கிய முதல் திருத்தந்தையாகவும் திகழ்பவர். தலைமைப்பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை புலம்பெயர்ந்தோர், பெண்கள், குழந்தைகள், ஏழைகள், போரினால் துன்புறும் மக்கள் என அனைவரையும் இடைவிடாது நினைத்து செபித்து வருபவர். 88 வயது நிறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தனது மூவேளை செப உரைகள் மற்றும் மறைக்கல்வி உரைகளில், அமைதிக்காக செப விண்ணப்பங்களை ஏறெடுப்பதிலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு தனது செபங்களை எடுத்துரைப்பதிலும் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை.
எனக்காக செபிக்க மறக்கவேண்டாம்
செபத்தின் வல்லமையை உணர்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். செபம் என்பது நமது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது, நமது வாழ்க்கையை உந்திச்செல்ல வைக்கும் ஆற்றல் பெற்றது. நமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து நம்மை மீட்டு அதனிலிருந்து நாம் தொலைவில் இருக்க உதவுகின்றது. நமது சொந்த ஆற்றல் கொண்டு நம்மால் தொலைதூரத்திற்கு செல்ல முடியாது. நாம் தான் என்று நினைத்தோமானால் நாம் விரைவில் தோல்வியடைவோம் என்று செபத்தின் மேன்மையையும் வல்லமையையும் உணர்த்தி வருபவர் திருத்தந்தை. 2020 -ஆம் ஆண்டு மே மாதம் செபம் என்ற புதிய மறைக்கல்வி தொடர் வழியாக செபத்தின் வல்லமையை இறைமக்களாகிய நாம் அனைவரும் உணரச் செய்தவர். செபம் என்பது நம்பிக்கையின் உயிர்மூச்சு. அது இறைவனில் நம்பிக்கைக் கொண்டோரின் இதயங்களிலிருந்து இறைவனை நோக்கி எழும் அழுகுரல் என்று எடுத்துரைத்தார். செபத்தின் மகிமையை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் தனது எல்லா உரைகளின் இறுதியிலும் எனக்காக செபிக்க மறவாதீர்கள் என்று எடுத்துரைத்தும் வருகின்றார். கோவிட் 19 பெருந்தொற்று நோய்க்காலத்தின்போது தன்னந்தனியாக மனித குலத்திற்காக செபித்தவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்புறும் மக்கள் ஒவ்வொருவரின் துயரம் உணர்ந்து அவர்களுக்காகத் தானும் செபித்து, பிறரும் செபிக்க வலியுறுத்துபவர். அந்த விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தவர்களாய் ஒவ்வொரு நாளும் ஜெமெல்லி மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் இன்று வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் பூரண உடல் சுகம் பெற செபித்து வருகின்றனர். இத்தாலி மற்றும் உரோம் நகரில் வாழ்பவர்கள் மட்டுமன்று யூபிலி ஆண்டிற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இறைமக்களும் கூட திருத்தந்தைக்காக செபிக்க ஜெமெல்லி மருத்துவமனை முன்பு ஒன்று கூடுகின்றனர். ஆயன் எவ்வழியோ அவ்வழியே மந்தைகள் என்பதை உணர்ந்தவர்களாய் உலக மக்களுக்காக செபிக்கும் திருத்தந்தைக்காக செபிக்கின்றனர். உலகின் கடையெல்லை வரை வாழும் மக்கள் ஒவ்வொருவரும் திருத்தந்தையின் உடன் நலனுக்காக செபிக்கின்றனர். ஜெமெல்லி மருத்துவமனையில் செபிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும் ஒவ்வொருநாளும் திருத்தந்தைக்காக சிறப்பு செபமாலை வழிபாடானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உள்ளத்து வலிமை கொண்டவர் திருத்தந்தை
88 வயதுடைய திருத்தந்தை அவர்கள், உடலளவில் பல்வேறு பலவினங்களால் சோர்வுற்றாலும் உள்ளத்தளவில் வலிமை உடையவர். மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சைகளை மேற்கொண்ட தொடக்க காலத்திலும் கூட சிகிச்சை முடிந்தவுடன் தனது மந்தையாம் மக்களை சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். உடல்ரீதியான பிரச்சனைகளால் நோயுற்று எத்தனை முறை விழுந்தாலும் திருஅவையையும் மக்களையும் மனதில் கொண்டு அவர்களுக்காக உழைக்க உடனே எழுந்து பணியாற்ற எப்போதும் துணிபவர். பலவீனமான உடல், குரல் என அனைத்தையும் மீட்டு உலகின் கடையெல்லை வரை வாழும் மக்களை சந்திக்க பயணங்களை மேற்கொள்ளத் தயங்காதவர். தனிநபர் மற்றும் குழுக்களைச் சந்தித்தல், திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளுதல், என சக்கர நாற்காலியில் இருந்தவாறே தனது அத்தனை பணிகளையும் சிறப்பாக ஆற்றி வருபவர். வெளிநாட்டுப் பயணங்கள், இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள தலத்திருஅவைகள், உரோம் மறைமாவட்டங்களில் உள்ள தலத்திருஅவைகள் என எப்போதும் மக்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருப்பவர்.
பன்னிரெண்டாம் ஆண்டில் ஆற்றிய செயல்கள்
2024ஆம் ஆண்டு மார்ச் 13 திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டின் 11 ஆம் ஆண்டு நிறைவு முதல் 2025 -ஆம் ஆண்டு மார்ச் 13 வரை ஏறக்குறைய 45 மூவேளை செப உரை மற்றும் பாஸ்கா காலத்து மூவேளை செப உரைகளையும் ஆற்றியுள்ளார். 32 பொது மறைக்கல்வி உரைகளுக்குத் தலைமை தாங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏறக்குறைய 230 சந்திப்புக்களை மேற்கொண்டும், 30 திருப்பலிகளுக்குத் தலைமையேற்றும் சிறப்பு செய்துள்ளார். 2024 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஏறக்குறைய 12 நாள்கள் கொண்ட தனது 45ஆவது திருத்தூதுப்பயணத்தில், இந்தோனேசியா பாப்புவா நியுகினியா, திமோர்லெஸ்தே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணித்து சவாலான பயணத்தை சாதனையாக முறியடித்தார். தனது 87-ஆவது வயதில் 32,814 கிலோமீட்டர் தூரம் பயணித்து நான்கு நாடுகளில் உள்ள மக்களை சந்தித்தார் திருத்தந்தை. காலநேர வேறுபாடு, வெப்ப நிலை மாற்றம், பயண தூரம் என பல்வேறு சிக்கலான சூழலையும் எளிதில் சமாளித்து தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்தார். இப்பயணத்தின்போது பல்வேறு பழங்குடியினத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கட்டிடங்கள், தெருக்கள், மரங்கள் என எல்லா இடங்களிலும் இருந்து திருத்தந்தைக்கு தங்களது வரவேற்பினை மகிழ்வுடன் அளித்தனர். அதுமட்டுமல்லாது ஆஸ்திரேலியா இராணுவ விமானத்தில், பாப்புவா நியூ கினியாவின் விளிம்பில் உள்ள போர்ட் மோர்ஸ்பியிலிருந்து வானிமோ வரை, பழங்குடி மக்களிடையே காடுகளில் நற்செய்தியை அறிவிக்கும் அர்ஜென்டினா மறைப்பணியாளர்களைச் சந்தித்தார். ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளையும் அதில் வாழும் மக்களையும் சந்தித்த திருத்தந்தை ஐரோப்பா மற்றும் இத்தாலிக்குள் தனது திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டு ஏழைகள் மற்றும் இளையோருடன் தனது நெருக்கத்தைப் புதுப்பித்தார். டிசம்பர் மாதம் பிரான்சில் உள்ள மத்தியதரைக் கடலில் உள்ள மிகப்பெரிய தீவான கோர்சிகாவிற்கு ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இத்தாலியில் உள்ள வெனீஸ், வெரோனா மற்றும் திரியெஸ்தே பகுதிகளுக்குப் பயணித்தார். தனது பயணங்களில் தான் சந்தித்த தலைவர்கள், நாட்டு மக்கள் என அனைவருக்கும் அமைதி, உடன்பிறந்த உணர்வு, சனநாயகம் குறித்த வேண்டுகோள்களை முன்வைத்தார்.
2025 -ஆம் ஆண்டு யூபிலி
தனது தலைமைப் பதவியின் பன்னிரண்டாவது ஆண்டில் ஒரு மைல்கல் போன்ற நிகழ்வாக டிசம்பர் 24 அன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனிதக்கதவினைத் திறந்து வைத்து எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற 2025ஆம் ஆண்டு யூபிலியைத் துவக்கி வைத்தார். அடுத்த இரண்டாவது நாள் அதாவது டிசம்பர் 26 அன்று உரோம் ரெபிபியா சிறைச்சாலையில் ஒரு புனிதக்கதவினைத் திறந்து வைத்து தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பளிக்கவும், மனம்மாறியவர்களாக அவர்களும் யூபிலியைக் கொண்டாடவும் அழைப்புவிடுத்தார். அக்டோபர் மாதத்தில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாம் கூட்டம் வழியாக ஒருங்கிணைந்த பயணத்திற்கான பாதையை உருவாக்கினார். மறைமாவட்டங்கள், ஆயர் மாமன்ற ஆண்கள் மற்றும் பெண்கள், பொதுநிலையினர், துறவறத்தார் என வெவ்வேறு சூழல்கள் மற்றும் இடங்களிலிருந்து வந்திருந்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஆயர் மாமன்ற செயல்முறைகள் வரையறுக்கப்பட்டன.
சுற்றுமடல்கள்
2013 -ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களுடன் இணைந்து Lumen fidei என்ற சுற்றுமடல், 2015 -ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’ சுற்றுமடல், 2020 -ஆம் ஆண்டுல் மனித உடன்பிறந்த நிலை குறித்த Fratelli tutti சுற்றுமடல் என்னும் மூன்று சுற்றுமடல்களை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இயேசுவின் தூய இதயம் குறித்த Dilexit nos என்ற சுற்றுமடலை வெளியிட்டார். போர், சரிநிகரற்ற சமூக-பொருளாதார நிலை, கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம், தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் மனிதனின் இயல்புநிலை அச்சுறுத்தப்பட்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்ற சுற்றுமடல் வழியாக, மக்கள் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றவும், முக்கிய அடிப்படைத் தேவையாக இருக்கும் இதயத்தை மீண்டும் கண்டுகொள்ளவும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
கடந்த பன்னிரண்டு மாதங்களில் போர், வன்முறை மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் துன்புறும் நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்குத் தனது ஆன்மிக உடனிருப்பை பல்வேறு கடிதங்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புக்கள் வழியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார். அமைதிக்கான தனது விண்ணப்பங்களையும் செபங்களையும் ஏறெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதையும் அதிகமாக வலியுறுத்தி வருகின்றார். ஆயனுக்குரிய அக்கறையுடனும், தந்தைக்குரிய பாசத்துடனும் திருஅவையை பன்னிரண்டு ஆண்டு காலமாக சிறப்புற வழிநடத்தி 13-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி சிறக்க, நல்ல உடல் நலம் பெற சிறப்பாக செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்