வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தைக்காக சிறப்பு செபமாலை
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலத்திற்காக பிப்ரவரி 24 திங்கள்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணியளவில் இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1,30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பு செபமாலை வழிபாடானது நடைபெற இருப்பதாக திருப்பீடச் செய்தித்தொடர்பகம் தெரிவித்துள்ளது.
உரோம் கர்தினால்கள், உரோம் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்கள், உரோமன் கூரியாவைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருத்தந்தைக்காக செபிக்க இருக்கும் இச்செப வழிபாட்டிற்கு திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிப்ரவரி 24, திங்கள்கிழமையோடு பத்து நாள்களாக மருத்துவமனையில் இருக்கும் திருத்தந்தை அவர்கள், நல்ல உடல்நலம் பெற உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களால் சிறப்பு செபவழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில் உரோமில் உள்ள கர்தினால்கள் ஆயர்கள் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் இறைமக்கள் சார்பில் பிப்ரவரி 24, திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு சிறப்பு செபமாலையானது செபிக்கப்பட இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்