MAP

திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  (AFP or licensors)

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்

பிப்ரவரி 26, புதன்கிழமை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் என்னும் தலைப்பில் தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வி உரையை எழுத்துவடிவப் படிவமாக வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூபிலி ஆண்டு 2025 – ஐ முன்னிட்டு இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்னும் தொடர் மறைக்கல்வி உரையினை கடந்த வாரங்களில் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26, புதன்கிழமை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் என்னும் தலைப்பில் தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வி உரைக்காகத் தயாரித்து எழுத்துவடிவமாக வழங்கியுள்ளார்.

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் நுரையீரல் அழற்சி நோய்க்கென உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுவருகின்றது. இயல்பாக சுவாசிக்க முடிவதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் அவருக்கு செயற்கையாக வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் திருத்தந்தை அவர்களின்  உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும் தன் திருப்பீட நிர்வாகப்பணி அலுவல்களை மருத்துவமனை அறையிலிருந்தே சிறிய அளவில் ஆற்றத் துவங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் புதன் மறைக்கல்வி உரைக்காக ஏற்கனவேத் தயாரித்து வைத்திருந்தக் கருத்துக்களை இன்று நாம் காண்போம்.

லக்கா நற்செய்தியில் உள்ள இயேசுவைக் கோவிலி அர்ப்பணித்தல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகளின் அடிப்படையில் தனது கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆலயத்தின் குழந்தை இயேசுவைக் கண்ட சிமியோனின் இறைவார்த்தைகளுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.  

லக்கா 2: 27 -29

தூய ஆவியின் தூண்டுதலால் சிமியோன் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்க, பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர். என்றார்.

யூபிலி ஆண்டு தொடங்கியதிலிருந்தே இயேசுகிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் இயேசுவின் குழந்தைப்பருவம் பற்றிக் கருத்துக்களை புதன் மறைக்கல்வி உரையில் எடுத்துரைத்து வந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட நிக்ழவு குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கருத்துக்கள் இதோ,

அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்னும் நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் குறித்து சிந்திப்போம்.

இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்த நிகழ்வுகளில் நற்செய்தியாளர் லக்கா, அன்னை மரியா மற்றும் யோசேப்பு, கடவுளின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் எவ்வளவுக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று எடுத்துரைக்கின்றார். உண்மையில், இஸ்ரேலில் குழந்தையை ஆலயத்தில் அர்ப்பணிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதற்கு இணங்க நடக்க விரும்பியவர்கள் அதை ஒரு மதிப்புமிக்க நடைமுறையாகக் கருதினர். பிள்ளைப்பேறற்றவராக இருந்த இறைவாக்கினர் சாமுவேலின் தாயான அன்னாவும் அவ்வாறே இருந்தார்; கடவுள் அவருடைய வேண்டுதலைக் கேட்டார், அவர் தன் மகனைப் பெற்ற பிறகு, அவனை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன் என்று கூறி கடவுளுக்கு அர்ப்பணித்தார். (1சாமு.1:24-28).

எனவே தான் நற்செய்தியாளர் லக்காவும் இயேசுவின் முதல் வழிபாட்டுச் செயலானது புனித நகரமான எருசலேமில் கொண்டாடப்பட்டது என்று விவரிக்கின்றார். எருசலேம் அவரது பணியின் இலக்கை நோக்கிச்செல்லும் இடமாக இருந்தது என்பதையும் எடுத்துரைக்கின்றார்.

மரியாவும் யோசேப்பும் இயேசுவை குடும்பம், மக்கள், கடவுளுடனான உடன்படிக்கை ஆகியவற்றின் வரலாற்றோடு வரையறுத்து நிறுத்தவில்லை. மாறாக, அவர்கள் அவருடைய பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றைக் கவனித்து, அவரை நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் சூழலில் அறிமுகப்படுத்துகிறார்கள். தங்களை விட மிக உயர்ந்த ஓர் அழைத்தலைப் பெற்றுள்ள அவரைப் படிப்படியாக வளர்கிறார்கள்.

இறைவேண்டலின் வீடாகிய ஆலயத்தில் ஒரு முதியவராகிய சிமியோனிடத்தில் தூய ஆவியார் பேசுகின்றார். சிமியோன், நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்;  தூய ஆவியை பெற்றிருந்த அவர், ஆலயத்தில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவரின் பிரசன்னத்தை உணர்கிறார், காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;. (எசாயா 9:1) என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கிணங்க, "நமக்காகப் பிறந்தவர்", "நமக்குக் கொடுக்கப்பட்ட ஆண்மகவு”, அமைதியின் அரசர் என அழைக்கப்படும் குழந்தை இயேசுவைச் சந்திக்கச் செல்கிறார். சிறுகுழந்தையாகத் தன் கரங்களில் ஓய்வெடுக்கும் அந்த எளியக் குழந்தையைத் தழுவுகிறார். ஆனால் உண்மையில், சிமியோன் குழந்தை இயேசுவை அரவணைத்துக் கொள்வதன் வழியாக தன்னுடைய ஆறுதலையும், தனது இருப்பின் முழுமையையும் காண்கிறார். இதை அவர் ஒரு நெகிழ்ச்சியான உணர்வை நன்றியுணர்வு நிறைந்த பாடல் வரிகளாக வெளிப்படுத்துகிறார், இவ்வரிகள் திருஅவையில் ஒருநாளின் முடிவில் கூறப்படும் செபமாகவே மாறிவிட்டது. “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை”(லூக் 2:29-32).

இஸ்ரயேலின் மீட்பரை சந்தித்த மகிழ்வினைப் பாடலாக சிமியோன் பாடுகிறார். அவர் தான் பெற்றக் கொடையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் நம்பிக்கையின் சான்றாக விளங்குகின்றார். ஏமாற்றமடையாத எதிர்நோக்கிற்கு அவர் ஒரு சான்று சிமியோன். மனிதனின் இதயத்தை மகிழ்ச்சியாலும் அமைதியாலும் நிரப்பும் கடவுளின் அன்பிற்கு அவர் ஒரு சான்று. இந்த ஆன்மிக ஆறுதலால் நிரப்பப்பட்ட முதியவரான சிமியோன், மரணத்தை முடிவாக அல்ல, மாறாக நிறைவாகவும், முழுமையாகவும் காண்கிறார்.

அந்நாளில், மீட்பராகிய இறைவன் குழந்தை இயேசுவாக மனு உரு எடுத்ததைக் கண்டது சிமியோன் மட்டுமல்ல. மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவரும், எண்பத்து நான்கு வயதானவருமான அன்னாவும் குழந்தை இயேசுவைக் காண்கின்றார். குழந்தையை இயேசுவைப் பார்த்தவுடன், அன்னா இஸ்ரவேலின் கடவுளைக் போற்றிப்புகழ்கின்றார், அந்தக் குழந்தையே மக்களை மீட்கும் என்று மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசுகின்றார்.

இந்த இரு இறைவாக்கினர்களின் மீட்பின் பாடலானது யூபிலி அறிக்கையை அனைத்து மக்களுக்கும் உலகத்திற்கும் வெளியிடுகிறது. எருசலேம் ஆலயத்தில் எதிர்நோக்கு இதயங்களில் மீண்டும் தூண்டப்படுகிறது, ஏனெனில் நமது எதிர்நோக்காம் இயேசு கிறிஸ்து தனது வருகையை எருசலேம் ஆலயத்தில் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, சிமியோன் மற்றும் அன்னாவைப் பின்பற்றுவோம், இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகளான அவர்கள் தோற்றங்களுக்கு அப்பால் பார்க்கும் திறன் கொண்ட தெளிவான பார்வை கொண்டவர்கள். சிறிய நிலையில் இருக்கும் கடவுளின் பிரசன்னத்தை நுகரத் தெரிந்தவர்கள், கடவுளின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கவும், நம் சகோதர சகோதரிகளின் இதயங்களில் எதிர்நோக்கை மீண்டும் தூண்டவும் தெரிந்தவர்கள்.

இவ்வாறாக தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை திருப்பயணிகளுக்காக எழுத்து வடிவப் படிவத்தில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த 12 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைபெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் உடல்சுகம் பெற தொடர்ந்து இறைவனிடம் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2025, 14:13