MAP

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மருத்துவப் பணி மிகவும் அழகானது மற்றும் உண்மையானது!

Catanzaro, Cosenza, Crotone மற்றும் Vibo Valentia பகுதிகளை சேர்ந்த பேறுகால உதவியாளர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக அவர்களைப் பாராட்டியதுடன் அவர்களுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் எடுத்துரைத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் மருத்துவப் பணி மிகவும் அழகானது, உண்மையானது மற்றும் வாழ்க்கைக்கான பாடல் என்றும், குறிப்பாக, இந்தக் காலங்களில், மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் தாய்மை மற்றும் தந்தைமை மீதான உற்சாகம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது; அவை பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைக் காட்டிலும் சிரமத்தின் ஆதாரங்களாகக் காணப்படுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 6, வியாழக்கிழமை இன்று, Catanzaro, Cosenza, Crotone மற்றும் Vibo Valentia பகுதிகளை சேர்ந்த பேறுகால உதவியாளர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

அவர்களுடைய பணியின் மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றி அவர்களுடன் இணைந்து சிந்திக்க விருப்புவதாகக் கூறிய திருத்தந்தை, தொழில்முறை, மனித உணர்திறன் மற்றும் இறைவேண்டல் குறித்த மூன்று தலைப்புகளின்கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

01. தொழில்முறை

முதலாவதாக, உங்கள் துறையில் தொடர்ச்சியான முன்னேற்றம் என்பது ஒரு தொழில்முறை கடமை மட்டுமல்ல, புனிதத்திற்கான பாதையும் கூட என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வழக்கமான மகப்பேறு பராமரிப்பு அல்லது உயிர்கள் ஆபத்தில் இருக்கும் முக்கியமான சூழ்நிலைகளில் சிறந்த முறையில் தொண்டு செய்ய திறமை உங்களை அனுமதிக்கிறது என்றும் மொழிந்தார்.

02. மனித உணர்திறன்

இரண்டாவதாக, குழந்தை பிறப்பு என்பது பெற்றோர் பாதிக்கப்படக்கூடிய ஒரு முக்கியமான தருணம். ஆகவே, அவர்களுக்கு அரவணைப்பு மற்றும் கனிவான ஆதரவை வழங்குவது அவசியம் என்றும், இது அவர்களின் மகிழ்ச்சி மற்றும் புதிய வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

03. இறைவேண்டல்

மூன்றாவது, இறைவேண்டல் என்பது விசுவாசிகளுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக அமைகிறது என்றும், இது நோயாளார்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அல்லது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டாலும், உலகிற்குப் புதிய வாழ்க்கையைக் கொண்டு வருவதில் பெற்றோர், இயற்கை மற்றும் கடவுளுக்கு இடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

நீங்கள் பணியாற்றும் பெற்றோர் மற்றும் குழந்தைகள்மீது நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஆழமான பொறுப்பை உணருமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, உங்கள் இறைவேண்டல்களில், குறிப்பாக, திருப்பலி மற்றும் தனிப்பட்ட உங்களின் பக்தி முயற்சிகளின்போது அவர்களை நினைவில்  கொள்ளுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 பிப்ரவரி 2025, 16:21