செயற்கை நுண்ணறிவைக் குறித்த பொறுப்பு மிகவும் அவசியம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“’பாலியல் முறைகேடுகள்’ என்னும் இந்தக் கசப்பை சமூகத்திலிருந்து அகற்றவும், குறிப்பாக, நீங்கள் ஊக்குவிக்கும் முன்முயற்சி மற்றும் அதன் பலன்களை கடவுள் ஆசீர்வதிக்கவும் நான் உங்களுக்காக இறைவேண்டல் செய்கிறேன்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 25 செவ்வாய்க்கிழமை முதல் 27 வியாழக்கிழமை வரை பெருவிலுள்ள லிமாவில் "செயற்கை நுண்ணறிவு மற்றும் பாலியல் முறைகேடு: தடுப்பதற்கான புதிய சவால்” என்ற தலைப்பில் CEPROME மற்றும் சிறார்களின் பாதுகாப்புக்கான பாப்பிறை அமைப்பு ஏற்பாடு செய்த நான்காவது இலத்தீன் அமெரிக்க மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
ஜனவரி 13, திங்களன்று, திருத்தந்தையால் கையொப்பமிடப்பட்ட இச்செய்தியில், இம்மாநாட்டில் பங்குபெறும் அனைத்துப் பங்கேற்பாளர்களுடன் தானும் இணைந்துகொள்ள விரும்புவதாகவும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் சவால்களை, குறிப்பாக, தீங்கு விளைவிக்கும் உட்கூறுகளை உருவாக்குவதில் அதன் பங்கை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை, இதனைப் பயன்படுத்துபவர்கள் அல்லது வடிவமைப்பவர்கள் அதன் செயல்விளைவிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கக் கூடிய தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை பற்றிய தவறான உணர்வுக்கு எதிராக எச்சரித்துள்ள திருத்தந்தை, தொழில்நுட்பம் இன்னும் மனிதக் கட்டளைகளைப் பின்பற்றுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளை ஆற்றல்வாய்ந்த காரை ஓட்டுவதற்கு சமம் என்று தனது உரையில் ஒப்பிட்டுக்காட்டியுள்ள திருத்தந்தை, இதன் தவறான பயன்பாட்டைத் தடுக்க தெளிவான விதிமுறைககளை உருவாக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தரும் இந்தச் சவால்களுக்கான பதில்களைத் திருவிவிலியம் வழங்க முடியும் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, தீங்கு பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களை நிறுவுவதை ஊக்குவித்தல் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியில், இந்த மாநாட்டின் வெற்றிக்காகவும், அதன் பங்கேற்பாளர்களுக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்