MAP

ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை உடல்நலம் பெற இறைவேண்டல் செய்யும் பெண் ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை உடல்நலம் பெற இறைவேண்டல் செய்யும் பெண்  (ANSA)

திருத்தந்தையின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது!

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக திருத்தந்தை அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகள் தினசரி இருமுறை விசுவாசிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 25, செவ்வாய் மாலை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்றும், கடுமையான சுவாசக் கோளாறுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்குத் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24, திங்கள் இரவு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்முறையில் உறங்கி ஓய்வெடுத்ததார் என்றும் பிப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை காலையில், திருநற்கருணை  பெற்ற பிறகு, அவர் தனது திருப்பீட நிர்வாகப்பணி அலுவல்களைத் தொடர்ந்தார் என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

மேலும் திருத்தந்தை கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படவில்லை என்றும், அவரது குருதியியக்க அளவுருக்கள் (hemodynamic parameters) நிலையானதாக இருப்பதாகவும், அவரது உடல் நிலை, மருத்துவக் கணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

மேலும், தீவிர நுரையீரல் அழற்சி நோய் காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தற்போது ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடும் இவ்வறிக்கை, அவரின் மருத்துவ ஆய்வுகள் இலேசான சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகளைக் காட்டியது என்றும், எனினும் இது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் உரைத்துள்ளது.  

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகள் தினசரி இருமுறை விசுவாசிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2025, 10:21