ஏழைகளிடையே இறையன்புடன் சேவையாற்றும் Gaudium et Spes அமைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வெளியிட்ட ஏடுகளுள் ஒன்றான Gaudium et Spes, அதாவது மகிழ்வும் எதிர்நோக்கும் என்ற ஏட்டின் பெயரில் குழு ஒன்றை உருவாக்கி பிறரன்பு பணிகளை ஆற்றிவரும் அமைப்பின் ஏறக்குறைய 80 பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏட்டின் Gaudium et Spes வழங்கும் படிப்பினைகளுக்கு ஏற்ப ஏழைகளுக்கு உதவும் அவர்களின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை, ஒரே உடலின் அங்கத்தினர்களாக உலகளாவிய சகோதரத்துவ உணர்வுடன் இயேசுவில் ஒன்றித்து, ஏழைகளுடன் ஒருமைப்பாட்டில் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
கிறிஸ்துவில் நாம் வாழ்வது என்பது ஒரே மாண்புடைய ஒரு குடும்பமாக, மற்றும் உடன்பிறந்த உணர்வுடையவர்களாக நம்மை மாற்றுவதோடு, திருப்பலியில் திருநற்கருணை என்னும் உணவை ஒன்றிணைந்து உண்ணவும் அழைக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் அணுகிச்சென்று அவர்கள் நடுவே இறையன்பின் கருவிகளாகச் செயல்பட தூய ஆவியார் நமக்கு வழிகாட்டுகின்றார் என Gaudium et Spes அமைப்பிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறும் மக்களை இறைவன் அரவணைத்து ஆறுதல் வழங்குகிறார் என்பதை அவர்களிடையேயான பணிகள் வழியாக உணர்த்திவரும் இக்குழுவினர், எதிர்நோக்கின் ஆதாரங்களாக இருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்