MAP

Triveneto இறையியல் கல்வித்துறை Triveneto இறையியல் கல்வித்துறை 

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்பும் இறையியல் கல்வி நிறுவனம்

கடந்த 20 ஆண்டுகளாக இறையியல் கல்வி வாயிலாகTriveneto இறையியல் கல்வித்துறைக் குடும்பம், மக்களுக்குச் செய்து வரும் ஏராளமான நன்மைகள், இளைய தலைமுறையினருக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்றவற்றிற்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

Triveneto இறையியல் கல்வித்துறைக் குடும்பம் முழுவதும் திருஅவையின் பணிக்கு ஒத்துழைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்ப வேண்டும் என்றும் ஊக்கமூட்டி வாழ்த்துச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை Triveneto இறையியல் கல்வித்துறை நிறுவப்பட்டதன் 20-ஆவது ஆண்டை முன்னிட்டு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான பாரம்பரியத்திற்கு நம்பிக்கை உடையவர்களாகவும், காலத்தின் அடையாளங்களைப் படிக்கத் தங்களது இதயத்தைத் திறந்தவர்களாகவும் இருக்க அத்துறையினருக்கு எடுத்துரைத்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக இறையியல் கல்வி வாயிலாக மக்களுக்குச் செய்து வரும் ஏராளமான நன்மைகள், ளைய தலைமுறையினருக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்றவற்றிற்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் உண்மையை, சமகால மனிதனுக்குத் திறம்பட கொண்டு செல்வதற்கான புதிய சவால்களைத் துணிவுடன் ஏற்று, செயல்பட்டு வருவதற்குத் தனது வாழ்த்துக்களையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இறையியல் கல்வி மற்றும் ஆழப்படுத்துதல் வழியாக மட்டுமன்றி, ஒவ்வொரு நபரின் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வின் வழியாக உருவாக்கத்திற்கான இடமாக இறையியல் கல்வி நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் அடித்தளம் கொண்ட உண்மை, நன்மை, அழகு ஆகியவற்றின் அடிப்படையில், இளைஞர்கள் தங்களை உணர்ந்து கொள்ள, அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை ஆசிரியர்கள் நன்கறிவார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.  

இறையியல் கல்வித்துறை இதுவரை ஆற்றிய செயல்கள் மற்றும் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், ஞானத்தின் இருப்பிடமான அன்னை மரியின் பாதுகாப்பில் புதிய பாதையை நாடி இதயப்பூர்வமாக அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2025, 12:21