மறைந்திருக்கும் கடவுளின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் பணி
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகில் மறைந்திருக்கும், கடவுளின் மகத்துவத்தை, நமது கண்கள் மற்றும் இதயத்தால் உணரவைப்பது கலைஞர்களின் பணி என்றும், மனிதகுலம் தனது திசையையும், எதிர்நோக்கின் எல்லையையும் இழக்காமல் இருக்க உதவுவதும் கலைஞர்களின் பணி என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் José Tolentino de Mendonça
பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில், கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகின் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் திருப்பலிக்கு தலைமையேற்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைக் கருத்துக்களை எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça.
கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகின் மக்கள் அனைவரும் பேறுபெற்றொர்களின் சான்றுகளாக இருக்க அழைக்கப்படுகின்றார்கள் என்றும், அழகை உருவாக்குவது மட்டுமல்லாது, வரலாற்றின் இடையில் மறைந்திருக்கும் உண்மை, நன்மை மற்றும் அழகை வெளிப்படுத்துதல், குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்தல், துன்பத்தை நம்பிக்கையாக மாற்றுதல் போன்றவை கலைஞர்களின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் José Tolentino de Mendonça.
சமூக, பொருளாதாரச் சிக்கல் மற்றும் நெருக்கடியில் வாழும் நாம், ஓர் இலக்கை நோக்கி நடக்கும் திருப்பயணிகளா? அல்லது நாடோடிகளாக அலைந்து திரிபவர்களா என சிந்திப்போம் என்று சிந்திக்க வலியுறுத்திய கர்தினால் Mendonça அவர்கள், மனிதகுலம் தனது திசையை இழக்காமல், எதிர்நோக்கின் எல்லையை இழக்காமல் இருக்க உதவுவதே கலைஞரின் பணி என்றும் எடுத்துரைத்தார்.
உண்மையான எதிர்நோக்கு என்பது எளிதானதோ, மேலோட்டமானதோ அல்ல, அது மனித இருப்பு என்னும் நாடகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது என்று வலியுறுத்திய கர்தினால் Mendonça அவர்கள், கடவுளின் வார்த்தை என்னும் நெருப்பால் சுட்டெரிக்கக்கூடியது, ஒளிதரக்கூடியது என்றும் கூறினார்.
அதனால்தான் உண்மையான கலை எப்போதும் மறைபொருள், நம்மை மிஞ்சும் அழகு, துயரத்துடன் எழுப்பும் கேள்வி, உண்மையான அழைப்புடன் நம்மைச் சந்திக்கின்றது என்றும், கவிஞர் ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸ் கூறுவது போல, உலகம் கடவுளின் மகத்துவத்தால் நிறைந்துள்ளது ஒளியைப் போல பிரகாசிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Mendonça.
மறைந்திருக்கும் கடவுளின் மகத்துவத்தை நமது கண்கள் மற்றும் இதயத்தால் உணரவைப்பது கலைஞர்களின் பணி என்று எடுத்துரைத்த கர்தினால் அவர்கள், தங்களது படைப்பு வழியாக, பகுத்தறிவை உருவாக்கி, இந்த உலக நிகழ்வுகளின் வெவ்வேறு எதிரொலிகளைப் பகுத்தறிய மற்றவர்களுக்குக் கலைஞர்கள் உதவுகிறார் என்றும் கூறினார்.
உலகின் காயங்களில் சாய்ந்து கொள்ளத் தெரிந்தவர்களாக, ஏழைகள், துன்பப்படுபவர்கள், காயமடைந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் அழுகையைக் கேட்கத் தெரிந்தவர்களாக, அழகின் பாதுகாவலர்களாக கலைஞர்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார் கர்தினால் Mendonça.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்