MAP

இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி

ஏறக்குறைய 40,000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியினைத் துவக்கினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில், இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.00 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தலைமையேற்று சிறப்பிக்கப்பட்டது.

ஏறக்குறைய 40,000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியினையும் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியினையும் துவக்கினார். முதல் வாசகமானது ஆங்கில மொழியில் வாசிக்கப்பட, பதிலுரைப் பாடலானது சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. அதன்பின் இரண்டாம் வாசகமானது இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

லூக்கா நற்செய்தியில் உள்ள “முதல் சீடர்களை அழைத்தல்” என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகளின் அடிப்படையில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், இயேசு சீடர்களைப் பார்த்தார், படகில் ஏறினார், அமர்ந்தார் என்னும் இயேசுவின் மூன்று செயல்கள் குறித்தக் கருத்துக்களை விவரித்து விளக்கினார்.

திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் மன்றாட்டுக்களானது, சீனம், இஸ்பானியம், போலந்து, ஜெர்மானியம், மலையாளம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. திருப்பலியின் நற்கருணை வழிபாட்டுப் பகுதியானது ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Robert Francis Prevost அவர்களாலும், பேராயர் Santo Marcianò அவர்களாலும் வழிநடத்தப்பட்டது.

திருநற்கருணைக் கொண்டாட்டத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையினை வழங்கினார். அதன்பின் மூவேளை செபத்தினை எடுத்துரைத்து திருப்பலியின் நிறைவு ஆசீரை வழங்கி இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியினை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2025, 08:16