MAP

மருத்துவமனைக்கு வெளியே திருத்தந்தைக்காக செபம் மருத்துவமனைக்கு வெளியே திருத்தந்தைக்காக செபம்  (ANSA)

மருத்துவமனையிலிருந்து திருத்தந்தை தொலைபேசியில் உரையாடல்

திருத்தந்தையால் இயல்பாக சுவாசிக்க முடிவதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் அவருக்கு செயற்கையாக வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மோதல்களின் விளைவாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவரும் பாலஸ்தீனாவின் காசா பகுதி மக்களுக்கென, அங்குள்ள திருக்குடும்ப ஆலய பங்குதந்தையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 24, திங்கள் மாலை தொலைபேசியில் உரையாடியதாக திருப்பீடப் பத்திரிகைத்துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் தற்போதைய உடல் நிலைக் குறித்து ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் விவரங்களை வெளியிட்டுவரும் திருப்பீடச் செய்தித்துறை, திங்களன்று மாலை வெளியிட்ட செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

திருத்தந்தை நலம் பெற வாழ்த்துக்களையும் செபங்களையும் வெளியிட்டு காசா பகுதி மக்கள் திருத்தந்தைக்கு காணொளி ஒன்றை அனுப்பியதைப் பார்த்த திருத்தந்தை அதற்கு நன்றி சொல்லும் நோக்கத்தில் காசா பங்குத் தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

மேலும், தனக்காக செபிக்கும் அனைவருக்கும் திருத்தந்தை நன்றியுரைப்பதாகவும் திருப்பீட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிப்ரவரி 25, செவ்வாய் காலையில் திருப்பீடச் செய்தித்தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திங்கள் இரவு நன்முறையில் உறங்கி ஓய்வெடுத்ததாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் நுரையீரல் அழற்சி நோய்க்கென உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடந்த 11 நாட்களாக உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுவருவதாகவும், அவரால் இயல்பாக சுவாசிக்க முடிவதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் அவருக்கு செயற்கையாக வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், இரத்தப் பரிசோதனை முடிவுகள் சிறுநீரக செயலிழப்பின் துவக்கத்தையே வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், பெரிய அளவில் கவலைப்படும் நிலையில் அது இல்லை எனவும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைகள் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள நிலையில், அவர் தன் திருப்பீட நிர்வாகப்பணி அலுவல்களை மருத்துவமனை அறையிலிருந்தே சிறிய அளவில் ஆற்றத் துவங்கியுள்ளதாகவும் அண்மை திருப்பீட அறிக்கைத் தெரிவிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 பிப்ரவரி 2025, 11:02