யூபிலி ஆண்டு புதன் மறைக்கல்வி உரைகள் ஒரு கண்ணோட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பு நேயர்களே கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கமாக நடைபெற இருந்த திருத்தந்தையின் இன்றைய புதன் மறைக்கல்வி உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த 7 வாரங்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய “ நமது எதிர்நோக்காம் இயேசு கிறிஸ்து என்னும் யூபிலி ஆண்டிற்கான புதிய தொடர் மறைக்கல்வி உரை பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.
டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமை கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலிக்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனித கதவினைத் திறந்து வைத்து, யூபிலி ஆண்டு 2025 – ஐத் தொடங்கிவைத்தார். எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு டிசம்பர் 18 புதன்கிழமையன்று புதிய தொடர் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார் திருத்தந்தை. இயேசுவின் குழந்தைப்பருவம், இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படும் குழந்தைகள், அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு, யோசேப்பிற்குக் கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு, அன்னை மரியா எலிசபெத் சந்திப்பு மற்றும் அன்னை மரியின் பாடல், இயேசுவின் பிறப்பும் இடையர்களின் வருகையும் என்ற தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். இறுதி இருவாரங்களான பிப்ரவரி 5 மற்றும் 12 ஆகிய இரு புதன்கிழமைகளில் திருத்தந்தைக்குப் பதிலாக பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரெல்லி அவர்கள் திருத்தந்தையின் சார்பாக அவரது மறைக்க்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவின் குழந்தைப்பருவம்
இயேசுவின் குழந்தைப்பருவம் என்ற முதல் அறிமுக உரையில், இயேசு கிறிஸ்துவே நமது திருப்பயணத்தின் இலக்கு. நமது பாதையும் அவரே நமது தொடர் பயணமும் அவரே. இயேசு பச்சிளம் குழந்தையாகவும், பாலனாகவும், வாலிபராகவும், பெற்றோருக்கு அடிபணிந்தவராகவும், அதே சமயம், அவர் தந்தைக்கும் அவருடைய இறையரசுப் பணிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவராக சிறு குழந்தையாக நமக்கு அடையாளப்படுத்தப்படுகின்றார் என்று எடுத்துரைத்தார். இறைத்தந்தையால் அருள்பொழிவு செய்யப்பட்ட கடவுளின் மகன், இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் பணிக்கு அனுப்பப்படுகின்றார். நாசரேத்தில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போலவே இவ்வுலகில் நுழைந்த இயேசு, "யோசேப்பின் மகன், தச்சரின் மகன் என்று அழைக்கப்படுகின்றார். உண்மையான கடவுளாகவும் உண்மையான மனிதனாகவும் திகழ்ந்தார் இயேசு என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள்
இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் குழந்தைகள் என்ற தலைப்பில் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பிள்ளைகள்,ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். கடவுள் கொடுத்த கொடைகளாகிய இக்குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக, மரியாதையுடனும் மாண்புடனும் நடத்தப்படுவதில்லை என்று எடுத்துரைத்தார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பவர்கள், குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதையோ, முறைகேடுகள் செய்யப்படுவதையோ, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையோ, அன்பற்றவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் அவர்கள் இருப்பதையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அல்லது முறைகேடுகள் செய்யப்படுவதைத் தடுக்கவும் கடுமையாக கண்டிக்கவும் கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், தங்களை கடவுளின் பிள்ளைகளாக அங்கீகரிப்பவர்கள், குறிப்பாக மற்றவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வர அனுப்பப்பட்டவர்கள், ஒருபோதும் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளில் அலட்சியமாக இருக்க முடியாது; சிறிய சகோதர, சகோதரிகளாகிய குழந்தைகள், அன்பு செய்யப்படுவதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் பதிலாக, அவர்களின் குழந்தைப் பருவம், மற்றும் கனவுகள், சுரண்டல் மற்றும் விளிம்புநிலைக்கு பலியாவதை அவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்ற இயேசுவின் இறைவார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்வோம்.
அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு
தனது முக்கியமான பணிகளை ஒப்படைக்கும் அனைத்து ஊழியர்களிடமும் கடவுள் அஞ்சாதே என்பதை எடுத்துரைக்கின்றார். ஆபிரகாம், ஈசாக்கு, மோசே என தனத் அடியார்கள் அனைவரிடமும் அவர் இதனை தெரிவித்துள்ளார். இறைவன் எல்லாம் வல்லவர் அவரால் இயலாதது எதுவுமில்லை அவர் மரியாவுடன் இருக்கின்றார், அவரது அருகில் இருக்கின்றார், உடன் நடப்பவராக, நிலையானவராக நான் எப்போதும் உன்னுடன் இருக்கின்றேன் என்று உறுதியளிக்கின்றார். அன்று அவருக்கு அருளிய இந்த வார்த்தை இன்று நமக்கும் அருளப்பட்டுள்ளது. இன்பம் துன்பம், கவலை, வருத்தம், தோல்வி என வாழ்வின் எல்லா சூழலிலும் கடவுள் நம்மிடமும் கூறுகின்றார், அஞ்சாதே! என்று.
மரியா நம்பிக்கையுடன் ஒளிர்கின்றார். இறைவார்த்தையை தன் சொந்த உடலில் வரவேற்கிறார். நிறைவுள்ள பெண்ணாக வாழ்கின்றார். மீட்பர் இயேசுவின் தாயும் நம் தாயுமான மரியாவிடமிருந்து நாமும் கற்றுக்கொள்வோம். இறைவார்த்தை நம் காதுகளைத் திறக்க அனுமதிக்கவும், இறைவார்த்தையை வரவேற்கவும், பாதுகாக்கவும் கற்றுக்கொள்வோம். இதனால் நமது இதயங்கள் இயேசுவை சுமக்கும் நற்கருணைப்பேழைகளாகவும், எதிர்நோக்கை நாடுபவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்கும் இல்லங்களாகவும் மாறும்.
யோசேப்பிற்கு இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
யோசேப்பு நேர்மையாளர், கடவுளுடைய நீதிநெறிமுறைகளின்படி, உண்மைச் சட்டத்தின்படி வாழும் ஒரு மனிதர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது நேர்மையிலிருந்து உத்வேகம் பெறுகிறார். கடவுளின் வார்த்தையைப் பின்பற்றி, யோசேப்பு சிந்தித்து செயல்படுகிறார்: தனது உள்ளுணர்வுகளும், மரியாவைத் தன்னுடன் அழைத்துச் செல்வதில் ஏற்படும் அச்சமும் தன்னை வெல்ல அவர் அனுமதிக்கவில்லை. மாறாக தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுவதை விரும்புகிறார். அவருடைய ஞானம் அவரைத் தவறான வழியில் நடக்காமல், கனவின் வழியே அவரில் எதிரொலிக்கும் கடவுளுடையக் குரலுக்குத் தன்னைத் திறந்தவராகவும் பணிவாகவும் ஆக்கிக் கொள்ள அனுமதிக்கிறது. யோசேப்பு கனவில் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை, மாறாக நம்புகிறார், எதிர்நோக்குகின்றார். அன்பு செய்கின்றார். காற்றில் கலந்து மறையும் வார்த்தைகள் எதையும் எடுத்துரைக்கவில்லை. மாறாக உறுதியான செயல்களால் பேசுகிறார்.
மரியா எலிசபெத்தைச் சந்தித்தல், மரியாவின் பாடல்
கன்னி மரியா எலிசபெத்தை சந்திக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக கருவில் இருக்கும் இயேசு, தனது மக்களை சந்திக்க வருகின்றார். “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்” (லூக்கா:1:68) என்று செக்கரியா பாடுவதற்கேற்றவாறு இயேசு மக்களைத் தேடி வருகின்றார். மெசியா என்ற தனது மகனின் அடையாளத்தையும், அவரது தாயாக தனது பணியை அங்கீகரிப்பதற்கு முன்பாகவும், மரியா தன்னைப் பற்றிப் பேசாமல், கடவுளைப் பற்றிப் பேசுகிறார். தனது நம்பிக்கையின் நிறைவை மகிழ்ச்சியை, எதிர்நோக்கை, கடவுளைப் புகழ்ந்து பாடும் பாடலாக வெளிப்படுத்துகின்றார்.
சிறியவரான மரியாவில் பெரிய காரியங்களை நிறைவேற்றவும், அவரை இறைமகனின் தாயாக்கவும் விரும்பி தன்னைத் தாழ்த்திய கடவுள், தனது மக்களை மீட்கத் தொடங்கினார். ஆபிரகாமுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உலகளாவிய ஆசீரை நினைவு கூர்ந்தார். கடவுளுடைய ஒவ்வொரு வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்காக எப்படிக் காத்திருப்பது என்பதை அறியவும், நம் வாழ்வில் மரியாவின் பிரசன்னத்தை வரவேற்கவும் கடவுளிடம் அருளைக் கேட்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இயேசுவின் பிறப்பும், இடையர்களின் வருகையும்
இறைமகனான இயேசு இவ்வுலகிற்குள் எதிரொலிக்கும் ஆரவாரங்கள் வரவில்லை. மாறாக மனத்தாழ்ச்சியுடன் தனது பயணத்தை இவ்வுலகில் தொடங்குகிறார். இடையர்கள், ஆயனாகிய கடவுள் தம் மக்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தும் மறைபொருளை அறிந்துகொள்கிறார்கள். வரலாற்றில் இதுவரை எதிரொலித்திராத மிக அற்புதமான நற்செய்தியைப் பெறுபவர்களாக, கடவுள் இடையர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இடையர்களைப் போல நாமும், கடவுளைக் கண்டு வியப்படையவும், அவரைப்போற்றிப் புகழவும், அவர் நம்மிடம் ஒப்படைத்தவைகளான நமது திறமைகள், தனிவரங்கள், அழைத்தல், நம் அருகில் இருக்கும் மக்கள் ஆகியோரைப் போற்றக்கூடியவர்களாக இருக்கவும் கடவுளின் அருளை நாம் கேட்போம்.
இவ்வாறாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது எதிர்நோக்காம் இயேசு கிறிஸ்து என்ற தலைப்பில் யூபிலி ஆண்டிற்கான புதிய மறைக்கல்வி உரையில் தனது கருத்துக்களைக் கடந்த வாரங்களில் திருப்பயணிகளிடம் பக்ரிந்து கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் நல்ல உடல் நலம்பெற அவருக்காகத் தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்