ஒரு புனிதத் தலத்தை நோக்கி நடப்பதே திருப்பயணியின் குறிக்கோள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்த யூபிலி ஆண்டிற்கென திருஅவை எடுத்துள்ள தலைப்பான ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்பது, நாம் எப்போதும் முன்னோக்கி நடந்து செல்லவேண்டியதை குறித்து நிற்கிறது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விழியிழந்தோர் மற்றும் பார்வை குறைபாடுடையோருக்கான இத்தாலிய கூட்டமைப்பின் அங்கத்தினர்களை ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணி என்பது நடைபோடுதலை நம் மனதிற்கு கொணர்வதால் அனைவரும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்றார்.
திருப்பயணி என்பவர் நடப்பவர் மட்டுமல்ல, மாறாக ஒரு புனிதத் தலத்தை நோக்கி நடப்பதை குறிக்கோளாகக் கொண்டவர் என்ற திருத்தந்தை, யூபிலி கொண்டாட்டங்களின்போது இந்த குறிக்கோள் என்பது புனிதக் கதவை நோக்கியதாகும் எனவும் எடுத்துரைத்தார்.
நம் வாழ்வுக்கு அர்த்தத்தை வழங்கும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரை நோக்கி நடைபோட்டு அவரிடமிருந்து புதிய வாழ்வைப் பெறுவோம் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு ஒருவரே மகிழ்ச்சியை வழங்கமுடியும் என்பதை பல புனிதர்கள் நிரூபித்துள்ளார்கள் என எடுத்துரைத்து, அண்மை கால புனிதர்கள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டார்.
மேலும், அசிசியின் பிரான்சிஸ், கிளாரா, குழந்தை இயேசுவின் திரேசா என சில முக்கிய புனிதர்களின் பெயர்களையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்