காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தந்திச்செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபிப்பதாக இரங்கல் தந்தை ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 11 சனிக்கிழமை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் தந்தியானது இலாஸ் ஏஞ்சல்ஸ் உயர்மறைமாவட்ட பேராயர் JOSÉ H. GÓMEZ அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினால் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்கள் அனைவருக்கும் இறைவனின் இரக்கம் கிடைக்கப்பெற செபிப்பதாகவும், துன்புறும் மக்கள் அனைவரோடும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 7 அன்று ஏற்பட்ட காட்டுத்தீயானது கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக இலாஸ் ஏஞ்சல்ஸ் நகர்ப் பகுதிகளில் வேகமாக பரவி வரும் நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்றும் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பிற்காக நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதுடன், காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், 10,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயின் பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள், வணிகத்தளங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரிந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்