MAP

கல்வியைப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது

கல்வியைப் பொறுத்தவரையில் நாம் ஒரு பேரழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பது, ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்து என எவரும் எண்ண வேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கல்வி பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமையைப்பெற ஒவ்வொரு விசுவாசியும் இந்த ஜனவரி மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்யவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஜெப வேண்டல் கருத்தை ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வியைப் பொறுத்தவரையில் நாம் ஒரு பேரழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வருகிறோம், இது, ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்து என எவரும் எண்ண வேண்டாம் எனவும் தன் ஜெப விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போராலும், குடிபெயர்வுகளாலும், ஏழ்மையாலும் இன்றைய உலகில் 25 கோடி சிறுவர்களும் சிறுமிகளும் கல்வியின்றி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற கவலையை வெளியிடும் திருத்தந்தை, சிறார் எந்த நிலையில் இருந்தாலும், புகலிடம் தேடுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கல்வியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது என மேலும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி என்பது அனைவருக்குமான நம்பிக்கை, அதன் வழியாக குடியேற்றதாரர்களும் புகலிடம் தேடுபவர்களும், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதிலிருந்தும், குற்றக்கும்பல்கள், சுரண்டல் போன்றவைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு காப்பாற்றப்பட முடியும் என மேலும் தன் ஜெப வேண்டலில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளஞ்சிறார்கள் பலர் சுரண்டப்படும் நிலையில் கல்வி என்பது இன்றியமையாதது, ஏனெனில், புகலிடம் தேடும் அவர்களை வரவேற்கும் சமுதாயங்களோடு இணைந்து வாழ கல்வி அவர்களுக்கு உதவும் எனக்கூறும் திருத்தந்தை, கல்வி என்பது நல்ல வருங்காலத்திற்கான கதவுகளைத் திறக்கிறது என்பதால் குடியேற்றதாரர்களும் புகலிடம் தேடுவோரும் தங்கள் கல்வி வழி, குடியேறியுள்ள நாடுகளுக்கும், தாங்கள் திரும்பும் பட்சத்தில் சொந்த நாட்டிற்கும் உதவ முடியும் என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

அந்நியரை வரவேற்பவர் எவரும் கிறிஸ்துவையே வரவேற்கிறார் என்ற கருத்தை தன் செய்தியின் இறுதியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் மனிதாபிமானமிக்க உலகைக் கட்டியெழுப்புவதில் உதவும் கல்விக்கான உரிமையை குடியேற்றதாரர்களும், அகதிகளும், போரால் பாதிக்கப்பட்டோரும் பெறவேண்டும் என தன்னுடன் சேர்ந்து அனைவரும் செபிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜனவரி 2025, 10:33