எதிர்நோக்கின் கதைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக...
மெரினா ராஜ் - வத்திக்கான்
எதிர்நோக்கின் கதைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக சமூகத்தொடர்பாளர்கள் இருக்கவேண்டும் என்றும், தகவல் தொடர்புப்பணியாளர்களின் விடுதலை நம் அனைவரின் விடுதலையைக் உணர்த்துகின்றது, உயர்த்துகின்றது என்றும் குறுஞ்செய்திகள் வழியாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 24 முதல் 26 வரை உலக சமூக தொடர்புகளுக்கான யூபிலி நாளாக வத்திக்கானில் சிறப்பித்துக்கொண்டிருக்கும் வேளையில் சனவரி 25 திங்கள்கிழமை ஹேஸ்டாக் உலக சமூகத்தொடர்பாளர்கள், சமூகத்தொடர்பு, எதிர்நோக்கின் கதைகள் என்ற தலைப்பில் மூன்று குறுஞ்செய்திகளை தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மையைத் தேடுவதற்காகவும் போரின் கொடூரங்களைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பதற்காகவும் தங்களது உயிரைப் பணயம் வைத்த அனைத்து சமூகத் தொடர்பாளர்களுக்கும் நன்றி என்றும், தகவல் தொடர்புப் பணியினால் கடந்த ஆண்டு தங்களது உயிரை இழந்த அனைத்து பணியாளர்களுக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் தனது முதல் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான இந்த யூபிலி ஆண்டில் அநீதியாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் அழைப்பு விடுப்பதாக தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், தகவல் தொடர்புப்பணியாளர்களின் விடுதலை நம் அனைவரின் விடுதலையைக் குறிக்கின்றது என்றும், நமது விடுதலையை உயர்த்துகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
எதிர்நோக்கின் கதைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றும் அனைத்து சமூகத்தொடர்பாளர்களுக்கும் தனது மூன்றாவது குறுஞ்செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை அவர்கள், அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும் அதில் மறைந்திருக்கும் நன்மையின் துகள்களைத் தேடுங்கள் என்றும், எதிர்நோக்கிற்கு நேர்மாறான அவநம்பிக்கைச் சூழலிலும் எதிர்நோக்கை தேட அனுமதியுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்