MAP

வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் மே 6, 2023) வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் மே 6, 2023)  (ANSA)

மிகச் சிறப்பானதும், மதிப்புமிக்கதுமான மெய்க்காப்பாளர்களின் பணி

உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் திருப்பயணிகளை வரவேற்று உதவும் பணியினையும் செய்து வருகின்றார்கள் வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் மிக சிறப்பான மற்றும் மதிப்புமிக்க பணியானது, நம்பிக்கை மற்றும் தொண்டுப்பணிகளின் ஆற்றலால் தூண்டப்பட வேண்டும் என்றும், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையருக்கு பாதுகாப்பளித்து உதவுவதன் வழியாக அகில உலக திருஅவைக்குப் பணியாற்றுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 18 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் (Guardia Svizzera Pontificia) சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 80 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்துடன் இணைக்கப்பட்ட அவ்வமைப்பின் 25ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மெய்க்காப்பாளர்களின் பணியில் பல்வேறு விதமான மாற்றங்கள் பல வந்தாலும், திருத்தந்தைக்கு பாதுகாப்பளிக்கும் பணியினை தனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், திருத்தந்தையைச் சந்திப்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் திருப்பயணிகளை வரவேற்று உதவும் பணியினையும் அவர்கள் செய்து வருகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

மெய்க்காப்பாளர் பணிக்கு மிகுந்த பொறுமை அவசியம் அது வத்திக்கான் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எல்லையற்ற பொறுமையுடன் திருப்பயணிகளுக்கு பதிலளித்து அவர்களது கேள்விகளுக்கு விளக்கமளித்து ஆற்றும் பணி மிகச்சிறந்தது என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

காவலர்கள் தங்கள் மதிப்புமிக்க பணியை மிகவும் பயனுள்ள விதத்திலும் அனைவரின் நன்மைக்காகவும் செய்வது அவசியம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பணிநிறைவு பெற்று தங்கள் நாட்டிற்கு மெய்க்காப்பாளர்கள் திரும்பிய பிறகும் வத்திக்கான் மற்றும் திருஅவைப் பணிகளில் முழுமனதுடன் பங்கேற்கின்றனர், நேரிலும் தொலைபேசி வழியாகவும் தங்களது உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றனர் என்றும் கூறினார்.

குடும்பங்கள் திருஅவை மற்றும் சமூகத்திற்கு அடிப்படை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மெய்க்காப்பாளர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வது மிக நல்லது என்றும் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்து பணியாற்றுவது மிக முக்கியம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து ஆதரிக்க வேண்டும் என்றும், இது தனிப்பட்ட சமூகத்திற்கும் ஒட்டுமொத்த திருஅவைக்கும் பொருந்தும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜனவரி 2025, 15:14