கடவுளின் உண்மையான புனித மக்கள் நாமே – திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சார இணைப்புக்கள் கடவுளின் உண்மையுள்ள புனித மக்களின் ஒற்றுமையையும், கடவுள் முகத்தின் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது என்றும், கடவுளின் உண்மையான புனித மக்கள் நாம் தாம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 20 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் உரோமில் உள்ள உருவாக்குனர் பயிற்சியினருக்கான ஆல்மோ கல்லூரியைச் சார்ந்த அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏறக்குறைய 60 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையாலும் அவரது அழைப்புக்கு பதிலளிக்கும் விருப்பத்தாலும் தூண்டப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை உள்ளடக்கிய சமூகமாக அக்க்கல்லூரியினர் இருக்கின்றனர் என்று கூறி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், 39 வெவ்வேறு மறைமாவட்டங்களிலிருந்து வந்திருக்கும் அவர்களில் 26 இத்தாலியர்களும் 14 இத்தாலியரல்லாதவர்களும், சீரோ மலபார் தலத்திருஅவையினரும் இருப்பது குறித்து எடுத்துரைத்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக திருத்தந்தை ஒருவர் காப்ரானிக்கா கல்லூரிக்கு ஆல்மோ என்ற பெயரை அளித்தார் இப்பெயருக்கு ஊட்டமளிக்கக் கூடியது பொருள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உயிரளித்து உயிர் கொடுக்கக்கூடியது என்னும் அர்த்தத்திலும் அது பொருள்படும் என்றும் கூறினார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் சில வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான பணியானது ஆல்மோ கல்லூரியில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்து நன்றி கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுளுடனான நெருக்கம், தலத்திருஅவை ஆயர்களுடன் நெருக்கம், மக்களுடனான நெருக்கம் ஆகிய மூன்றோடு, உங்களிடையே நெருக்கம் கொண்டிருங்கள் இது மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணமானது ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தத்தின் ஒரு பாதை என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இது திருஅவையை பங்கேற்பாளராகவும் மறைப்பணியாளர்களாகவும் மாற்றுகின்றது, கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்து நடக்க மேலும் அதனைத் திறமையானதாக்குகிறது என்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆவணங்களையும் சுட்டிக்காட்டினார்.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு வாழ்க்கையோடு பொருந்தவில்லை என்றால், கிறிஸ்தவ வழிபாட்டு முறை இல்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தேவையில் இருக்கும் மக்களுக்கு சிறிய, மதிப்புமிக்க பணியினை ஆற்றுவதன் வழியாக அவர்களது வாழ்க்கைச் சுமையினை நாம் குறைக்க உதவலாம் என்றும் கூறினார்.
தானம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட மேலாக அந்த ஏழைகளின் முகத்தில் இயேசுவைக் காண்பது மிக முக்கியம் என்றும், அவரது கைகளைத் தொட்டு கண்களைப் பார்த்து உதவியளிப்பதன் வழியாக இயேசுவுடன் நாம் உறவு கொள்கின்றோம், அவரோடு கொண்டுள்ள உறவைப் புதுப்பிக்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்