MAP

ஜிப்சி இன மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ( கோப்புப்படம் 2019) ஜிப்சி இன மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ( கோப்புப்படம் 2019) 

நாம் அனைவரும் ஒரே இல்லத்தில் வாழ்பவர்கள் என்ற உணர்வினை பெறுவோம்

தவறான புரிதல், நிராகரிப்பு, ஓரங்கட்டப்படுதல் போன்ற கடினமான நேரங்களில் கூட கடவுளின் உடனிருப்பை உணர்ந்துள்ளார்கள் ஜிப்சி இன மக்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையின் கதவுகளை அகலமாகத் திறந்து, நாம் அனைவரும் ஒரே இல்லத்தில் வாழ்பவர்கள் என்ற உணர்வினைப் பெறவேண்டும் என்றும், ஜிப்சி இன மக்களுக்காக உழைக்கும் மனிதர்களின் உணர்வும் நேரமும் நல்ல பலனைத் தர தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை இஸ்பெயினில் வாழும் ஜிப்சி இன மக்களின் 600ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறான புரிதல், நிராகரிப்பு, ஓரங்கட்டப்படுதல் போன்ற கடினமான நேரங்களில் கூட கடவுளின் உடனிருப்பை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த ஜிப்சி இன மக்களுக்கு 1965ஆம் ஆண்டு உரையாற்றிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளான “நீங்கள் திருஅவையின் இதயம், இறைத்தந்தையால் அன்புசெய்யப்பட்ட அவரது பிள்ளைகள்” என்ற வரிகளை மேற்கோள்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜிப்சி இன மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பொறுப்புணர்வுடனும் உண்மையான அக்கறையுடனும் பலர் உழைக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தில் அறிவுறுத்தப்பட்ட ஒன்றிணைந்து நடத்தல் என்னும் கருத்தை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், நற்செய்தியின் ஆற்றல் திருஅவையின் மதிப்புகளையும் கலாச்சாரத்தையும் தூய்மைப்படுத்தி மேம்படுத்தும் எனவே ஆயர்கள், குருக்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் என அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையின் மகிழ்ச்சியில் வாழ்வோம், எதிர்நோக்கு மற்றும் கிறிஸ்தவ அன்பில் வளர்வோம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், நமது வார்த்தைகள், செயல்கள், பணிகள் போன்றவற்றால் உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்துவோம் என்றும், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழந்து வாழ்கின்ற மக்களுக்கு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மகிழ்வைக் கொடுப்போம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கத்தோலிக்க திருஅவைக்கு உள்ளேயும் வெளியேயும் கடவுளைக் கண்டறிவதில் சிரமப்படும் இளைஞர்களுக்கு, நற்செய்தியை அறிவிக்கவும், ஒன்றிணைந்து நடக்கவும் உதவுவோம் என்றும், கடவுளின் உடனிருப்பை நமது வார்த்தைகள் மற்றும் செயல்களின் வழியாக வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜனவரி 2025, 13:43