33-ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க முடியாத பாறை, நம்மை வலிமையாக்கும் ஓர் அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் 33-ஆவது உலக நோயுற்றோர் தினத்திற்கான செய்தியை சனவரி 27, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், "எதிர்நோக்கு ஏமாற்றம் தராது. நமது துன்பத்தில் அது நம்மைப் பலப்படுத்துகின்றது" என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடினமான நோயினால் வருந்தும்போது, நமது அன்புக்குரியவர்கள் துன்பத்தில் வாடும்போது என எல்லா நேரங்களிலும் கடவுளின் அருகிருப்பு நமக்கு தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள்,துயரமான நேரங்களில் கடவுளின் அருகிருப்பை நாம் உணரவும், சிந்திக்கவும் ஏதுவாக சந்திப்பு, கொட, பகிர்தல் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சந்திப்பு
இயேசு எழுபத்திரண்டு சீடர்களைப் பணிக்காக அனுப்பும்போது நோயுற்றவர்களிடம், "இறையாட்சி உங்களுக்கு அருகில் உள்ளது" என்று சொல்லும்படி வலியுறுத்துகிறார், அதாவது, பலவீனமான வேதனையான, புரிந்துகொள்ள மிகவும் கடினமான நிலையிலும், இறைவனைச் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை அவர்கள் பெற உதவுமாறு சீடர்களிடம் இயேசு கேட்கிறார் என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை, நாம் ஒருபோதும் நினைக்காத, நாம் ஒருபோதும் சொந்தமாகக் கண்டிருக்க முடியாத ஒரு உறுதியின் கொடயினால் நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நோய் என்பது நம் மனதை கடவுளை நோக்கி திருப்புகின்ற சந்திப்பின் தருணமாக மாறுகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க முடியாத பாறை, நம்மை வலிமையாக்கும் ஓர் அனுபவம் என்றும், துன்பத்தினால் நாம் மீட்பின் மறைபொருளைக் கண்டடைகின்றோம் கடவுளிடமிருந்து வரும் ஆறுதலையும் நெருக்கத்தையும் கண்டுகொள்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
கொட
துன்பத்தைப் போலவே, எல்லா நம்பிக்கையும் இறைவனிடமிருந்து வருகிறது, எனவே அது முதலில் வரவேற்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய ஒரு கொட பரிசு என்றும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மட்டுமே நமது ஒவ்வோர் இலக்கும் நிலையான எல்லையற்ற அடிவானத்தில் அதன் இடத்தைக் காண்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
"சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை" என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இந்தப் பெரிய எதிர்நோக்கு" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க உதவும் சிறிய விளக்குகளை நமக்கு வழங்குகின்றன என்ற திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
உயிர்த்தெழுந்த இயேசு, எம்மாவு சீடர்களுடன் நடந்ததைப் போல நம்முடன் நடந்து நமது பயணத்தில் நண்பராக மாறுகிறார். எனவே சீடர்களைப் போலவே, நாமும் அவருடன் நமது குழப்பம், கவலைகள் மற்றும் ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும், நமக்கு அறிவூட்டுகின்ற, நம் இதயங்களைத் தூண்டுகின்ற அவரது வார்த்தையைக் கேட்க முடியும், அப்பம் பிட்கும்போது அவர் இருப்பதை நாம் அடையாளம் காண முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பகிர்தல்
துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் வாழும் இடங்கள் பெரும்பாலும் பகிர்வின் இடங்களாக இருக்கின்றன என்றும், அங்கு நாம் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளப்படுத்தி நம்பிக்கையோடு இருக்க வலியுறுத்துகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகிய அனைவரும் கடவுளின் தூதர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்