விண்மீன் போன்று இயேசுவை அடையாளம் காட்டுபவர்களாக இருங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
விண்மீன் தனது ஒளியால் ஞானிகளை பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றதுபோல நாமும் நமது அன்பால், நாம் சந்திக்கும் மக்களுக்கு இயேசுவைக் கொண்டு வருபவர்களாக இருக்கவேண்டும் என்றும், இறைமகன் மனிதராகப் பிறந்து கடவுளின் முகத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றார் என்பதை அறியச் செய்யவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 6 திங்கள்கிழமை திருக்காட்சிப் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலிக்கு தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்மீனின் பண்புகளான ஒளிவீசக்கூடியது, அனைவரின் பார்வைக்கும் தெரியக்கூடியது, பாதையை நோக்கி வழிநடத்தக்கூடியது என்ற தலைப்புக்களின்கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்ற ஞானிகளின் வார்த்தையானது யூதர்களுக்கு அரசர் பிறந்திருக்கின்றார் என்று எருசலேம் மக்களுக்கு அறிவிக்கும் சாட்சியாக இருக்கின்றது என்றும், விண்ணிலிருந்து எழும்பிய விண்மீன் ஒளியைக் கண்ட அவர்கள் தங்களது வாழ்க்கைப் பயணத்தை மாற்றினார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1.விண்மீன் ஒளிவீசக்கூடியது
விண்மீன் ஒளிவீசக்கூடியது, இயேசுவின் காலத்தில் இருந்த பல ஆட்சியாளர்கள் தங்களை விண்மீன் என்று அழைத்துக்கொண்டார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஏனெனில் சமூகத்தில் மிக உயர்ந்தவர்களாக, முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, பிரபலமானவர்களாக தங்களை அவர்கள் கருதிக்கொண்டார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
எந்த ஓர் ஆட்சியாளரின் இத்தகைய ஒளியானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பை, அதிசயத்தை ஞானிகளுக்கு வெளிப்படுத்தவில்லை என்றும், அவர்களின் சிறப்பும், செயற்கைத்தன்மையும், ஆற்றல் மிக்க செயல்கள் என எதுவும் மீட்பை நாடுகின்ற, தேவையில் இருக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.
தன்னை எரித்து, சுடர்விடும் ஒளியைக் கொடுத்த விண்மீன் அனைவருக்கும் மீட்பு மற்றும் மகிழ்ச்சிக்கான வழியைக் காட்டுவதைப் பற்றி எடுத்துரைக்கின்றது என்றும், அந்த வழியே நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும் அன்பு வழி என்றும் கூறினார் திருத்தந்தை.
மனிதனாகப் பிறப்பெடுத்து, தன் உயிரையே தியாகம் செய்து நமக்குத் தம்மையேத் தந்த இறைவனின் அன்பானது, அந்த அன்பை நாம் பிறரிடம் பிரதிபலிப்பதன் வாயிலாக, நாமும் ஒருவர் மற்றொருவர் மீது அன்புகாட்ட அழைப்புவிடுக்கின்றது என்றும், அவருடைய உதவியுடன், வாழ்க்கையின் இருண்ட இரவுகளில் எதிர்நோக்கின் இணக்கமான அடையாளமாக மாற வலியுறுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எதிர்நோக்கு என்னும் ஒளியால் நாம் ஒளிவீசுகின்றோமா? நம்முடைய நம்பிக்கையின் ஒளியால் மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கின்றோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகோள்விடுத்த திருத்தந்தை அவர்கள், கடவுளது அன்பின் வழி மென்மை, இரக்கம், உடனிருப்பு என்னும் பண்புகளைக் கொண்டது என்றும் கூறினார்.
இதயங்களை நம்பிக்கை என்னும் ஒளியால் நிரப்புவதன் வழியாகவும், வரவேற்பு, தாராளமனம், பகிர்தல், இரக்கச்செயல்கள், வார்த்தைகள், சைகைகள் வழியாகவும், இரக்கம் மற்றும் மனித நேயம் கொண்டவர்களாக இருப்பதன் வழியாகவும் கடவுளது அன்பை வெளிப்படுத்தலாம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஞானிகள் தங்கள் பார்வையை உயர்த்தி வானத்தில் விண்மீன்களைப் பார்த்தனர், பின் தொடர்ந்தனர் என்றும், பிறருக்கு ஒளியாக இல்லாத மனிதர்களாக இருப்பது மோசமானது என்றும் எடுத்துரைத்தார்.
2. அனைவரின் கண்களுக்கு புலப்படும் விண்மீன்
ஞானிகள் இரகசியமாக தெரிவிக்கப்பட்ட அடையாளம் வழியாக பாலன் இயேசுவைக் காணப் பயணிக்கவில்லை மாறாக எல்லார் கண்களுக்கும் புலப்பட்ட விண்மீனைப் பின் தொடர்ந்தார்கள் என்றும், எப்போதும் வானில் காணப்பட்ட விண்மீனைக் கண்டுகொள்ள ஏரோது மற்றும் அவருடன் இருந்த பிற ஆட்சியாளர்கள் முயலவில்லை என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், நம்பிக்கையோடு வானத்தைப் பார்ப்பவர்களுக்கு விண்மீன் புலப்பட்டது என்றும் தெரிவித்தார்.
நாம் பிறரது கண்களுக்கு நம்பிக்கையை எதிர்நோக்கை அளிக்கின்ற அடையாளமாக விண்மிண் போன்று இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், கடவுள் குறிப்பிட்ட சில வட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்துவதில்லை மாறாக, உண்மையுள்ள இதயத்துடன் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அண்மையில் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்றும் கூறினார்.
இதனை அடையாளப்படுத்தவே கிறிஸ்து பிறப்புக் குடிலில் வைக்கப்படும் மூன்று ஞானிகளின் உருவங்கள், எல்லா திசைகளைச் சார்ந்தவர்களாக, இளமை முதுமை என எல்லா வயதினை உடையவர்களாக சித்தரிக்கப்பட்டுகின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடவுள் நம் எல்லாரையும் தேடி வருகின்றார். எல்லா நிலையில் உள்ள மக்களாலும் தேடிக் கண்டடையப்படுகின்றார் என்றும்,
மக்களும் நாடுகளும் அதிக சக்திவாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டிருந்தாலும், பன்முகத்தன்மையில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், ஏற்றுக்கொள்ளல், சந்தித்தல் போன்றவற்றிற்குக் குறைவான விருப்பத்துடன் இருப்பதாகத் தோன்றும் இக்காலத்தில் இதுபற்றி சிந்திப்பது சிறப்பானது என்றும் கூறினார்.
விண்மீன்ஒளி அனைவருக்கும் தெரியும்படி, அது ஒவ்வொரு வீட்டையும் அடைந்து, ஒவ்வொரு தடையையும் கடந்து, தொலைதூர மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறதோ அதுபோல, கடவுள் தன்னை யாருக்கும் மறுக்கவோ மறப்பதோ இல்லை ஏனென்றால், அவர் ஒரு தந்தையாக தனது பிள்ளைகள் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றுபட்டு தனது இல்லத்தை நோக்கி வருவதைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
3.பாதையைக் காட்டக்கூடியது விண்மீன்
எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டிற்கான கருப்பொருளை விண்மீன் முன்னிலைப்படுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், "கிறிஸ்துவை முழுமையாக சந்திக்கவும், அவர் மீதுள்ள நம்பிக்கையை ஒப்புக்கொண்டு, அவருடைய இரக்கத்தின் மிகுதியைப் பெறவும், நம் இதயங்கள் ஓர் உள்நோக்கியப் பயணத்தை மேற்கொள்ள விண்மீனின் ஒளி நம்மை அழைக்கிறது என்றும் தெரிவித்தார்.
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுபவர்களுக்காக ஒன்றிணைந்து நடப்பது முக்கியமானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருஅவையின் ஆரம்ப நாட்களில் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டதைப் போல, விண்மீன்களைப் பார்த்து பாதைகாட்டும் மனிதர்களாக இருப்பதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க முடியும் என்றும் கூறினார்.
இவ்வாறு இறைவன் மரியாளைப் போல நம்மைச் சுட்டிக் காட்டும் விளக்குகளாகவும், நம்மைக் கொடுப்பதில் தாராளமாகவும், 'வரவேற்கவும், ஒன்றாக நடப்பதில் பணிவாகவும், இருக்க உதவுகின்றார் என்றும், நாம் அவரைச் சந்திக்கவும், அவரை அடையாளம் கண்டு வணங்கவும், அவரிலிருந்து தொடங்கி உலகிற்கு அவரது அன்பையும் ஒளியையும் கொண்டு வருபவர்களாக இருக்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்