திருத்தந்தையின் இறைவார்த்தை ஞாயிறு திருப்பலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
சனவரி 26 பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறினை இறைவார்த்தை ஞாயிறாகத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில் உலக சமூகத்தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலிக்குத் தலைமையேற்று சிறப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சனவரி 26 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுருபெருங்கோவிலில் ஏராளமான திருப்பயணிகள் கூடியிருக்க வருகைப் பாடலுடன் திருப்பலியானது ஆரம்பமானது. சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியினை ஆரம்பித்தார். அதன்பின் இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து முதல் வாசகம் ஆங்கில மொழியில் வாசித்தளிக்கப்பட்டது. திருப்பாடல் எண் 71 ஐத் திருத்தொண்டர் ஒருவர் பாடலாகப் பாட, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் உள்ள இறைவார்த்தைகள் இஸ்பானிய மொழியில் வாசித்தளிக்கப்பட்டன. லூக்கா நற்செய்தியில் உள்ள இயேசுவின் கலிலேயப்பணியின் தொடக்கம் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் நற்செய்தி வாசகமாக திருத்தொண்டர் ஒருவரால் பாடலாக பாடப்பட்டது. அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவார்த்தை ஞாயிறு திருப்பலி மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தையின் மறையுரைச் சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார் என்ற இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு ஓர் இறைவாக்கினர் மீட்பர் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. கற்பிக்கின்றது.
கடவுளின் வார்த்தை உயிருள்ளது. பல நூற்றாண்டுகளாக அவர் நம்முடன் நடந்து வருகிறார், மேலும் தூய ஆவியின் வல்லமையால் அவர் வரலாற்றில் செயல்படுகிறார்., மக்கள் மீதுள்ள அன்பினால் அவர் தனது வாக்குறுதியை எப்போதும் நிறைவேற்றுகிறார் என்பதை நாசரேத்தில் உள்ள தொழுகைக் கூடத்தில் நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்பதன் வழியாக இயேசு உணர்த்துகின்றார்.
இந்த இறைவார்த்தை ஞாயிறு நற்செய்தி வாசக்த்தில் “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” என்ற வரிகள் இடம்பெறுகின்றன. தூய ஆவியின் வல்லமை பெற்ற, இயேசு மீட்பரான இயேசு, கடவுளது அருள்தரும் ஆண்டினை அறிவிக்க தான் அனுப்பப்பட்டுள்ளதாக எடுத்துரைக்கின்றார். இயேசுவே உயிருள்ள வார்த்தை, அவரிலேயே மறைநூல்கள் நிறைவுபெறுகின்றன. அவரது அருளாலும், வியப்பாலும் நிரப்பப்பட்ட நாம் அவரது குரலுக்கு நமது இதயங்களையும். சிந்தனையையும் திறப்போம். ஏனெனில் ஆலயங்களில் வாசிக்கப்படும் மறைநூல்களின் வழியாகவேக் கடவுள் நம்முடன் பேசுகின்றார். கடவுளின் வார்த்தைகளான நற்செய்தியைக் கேட்கும்போது, அவற்றைக் கேட்பதோடும், புரிந்துகொள்வதோடும் மட்டுமல்லாமல் அவை நமது இதயத்தையும் அடைய வேண்டும், வியப்பை உருவாக்க வேண்டும். கடவுளின் வார்த்தை எப்போதும் நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றது. எப்போதும் நம்மைப் புதுப்பிக்கிறது, நமது இதயத்திற்குள் நுழைகிறது.
மீட்பரின் பணி ஒரு தனித்துவமான மற்றும் உலகளாவிய பணி. தனித்துவமானது, ஏனென்றால் அவரால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். உலகளாவியது, ஏனென்றால் அவர் அனைவரையும் அதில் ஈடுபடுத்த விரும்புகிறார் இத்தகைய மீட்பரின் பணியினை வகைப்படுத்தும் ஐந்து செயல்களைப் பற்றி நாம் சிந்திப்போம்.
முதலாவதாக, அவர் "ஏழைகளுக்கு நற்செய்தியைக் அறிவிக்க அனுப்பப்பட்டார்". இயேசு அறிவிக்கும் நற்செய்தி: கடவுளின் அரசு அருகில் உள்ளது! கடவுள் ஆட்சி செய்யும்போது, மனிதன் மீட்கப்படுகிறான். கடவுள் தம் மக்களைச் சந்திக்க வருகிறார், தாழ்மையானவர்களையும் ஏழைகளையும் கவனித்துக்கொள்கிறார். இந்த இரக்கத்தின் நற்செய்தி வரிகளானது, நம்மை பிறரன்புச் செயல்கள் செய்யவும், நம் அண்டை வீட்டாரின் கடன்களை மன்னிக்கவும், தாராளமான சமூக ஈடுபாட்டிற்கும் அழைக்கிறது. கடவுள் உடனிருப்பவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
இரண்டாவதாக, "சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிப்பது. நமது தீமையின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, ஏனென்றால் எதிர்காலம் கடவுளுடையது. ஆவியின் வல்லமையால், இயேசு நம்மை எல்லா குற்றங்களிலிருந்தும் மீட்டு, , ஒவ்வொரு உள் மன சங்கிலியிலிருந்தும் நம் இதயங்களை விடுவித்து, தந்தையின் மன்னிப்பை உலகிற்கு கொண்டு வருகிறார். இவ்வரிகள் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் உணர்ச்சிமிக்க சான்றுகளாக மாற நம்மை அழைக்கின்றன.
மூன்றாவதாக, பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிவித்தல். மெசியாவாகிய இயேசு ஆற்றல் மற்றும் மாயையின் கவர்ச்சியால் திகைக்க வைக்கப்படும் நமது இதயத்தின் கண்களைத் திறக்கிறார், ஆன்மாவின் நோய்களான அவை கடவுளின் உடன்இருப்பை நாம் அங்கீகரிப்பதைத் தடுக்கின்றன, பலவீனமானவர்களையும் துன்பப்படுபவர்களையும் நம் கண்களுக்குத் தெரியாதவர்களாக ஆக்குகின்றன. ஒளியின் வார்த்தையான இந்நற்செய்தி நம்மை உண்மைக்கும், நம்பிக்கையின் சாட்சிக்கும், வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கும் அழைக்கிறது.
நான்காவதாக, "ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்குதல்" எந்த அடிமைத்தனமும் மெசியாவின் பணியை எதிர்க்காது, அவர் நம்மை அவருடைய பெயரில் சகோதர சகோதரிகளாக ஆக்குகிறார். விடுதலையின் வார்த்தையான இவ்வார்த்தைகள் நம்மை மனமாற்றத்திற்கும், நேர்மையான சிந்தனைக்கும், சோதனையில் விடாமுயற்சிக்கும் அழைக்கிறது.
இறுதியாக, ஐந்தாவதாக, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அனுப்பியுள்ளார். இது வாழ்க்கையை வீணடிக்காத ஒரு புதிய காலத்திற்கு நம்மை நடத்துகின்றது. வாழ்வை உருவாக்குகின்றது. மீட்பருடனான இறுதி சந்திப்பிற்கான எதிர்நோக்குடன் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள நாம் தொடங்கியுள்ள யூபிலி ஆண்டைப் வலியுறுத்துகின்றது. வரவேற்கவும், ஒன்றிணைந்து வாழவும், திருப்பணிகளாக கடவுளின் அரசை நோக்கி பயணிக்கவும் நம்மை அழைக்கிறது.
இந்த ஐந்து செயல்கள் வழியாக இயேசு ஏற்கனவே எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றிவிட்டார். நமது விடுதலையை உணர்ந்து, கடவுள் நம்மை நெருங்கி வருகிறார், தீமையிலிருந்து நம்மை மீட்கிறார், நம் கண்களை ஒளிரச் செய்கிறார், ஒடுக்குமுறைகளின் நுகத்தை உடைக்கிறார், மேலும் அவர் நம்முடன் நடந்து நிலை வாழ்விற்கு நம்மை வழிநடத்தும் வரலாற்றின் மகிழ்ச்சியில் கொண்டுவருகிறார் என்று அறிவிக்கிறார்.
சகோதர சகோதரிகளே, இறைவார்த்தை ஞாயிறு சிறப்பிக்கப்படும் இந்நாளில் இறைத்தந்தை வார்த்தையாம் இயேசுவை மனிதனாக நம் மத்தியில் கொடுத்ததற்காக நன்றி கூறுவோம். இறைவார்த்தையைப் படிக்கும்போதும் செபிக்கும்போதும், கடவுளைப் பற்றிய தகவல்களைப் பெறுவது மட்டுமல்லாமல், இயேசு சொன்னவை மற்றும் செய்தவை அனைத்தையும் நமக்கு நினைவூட்டும் ஆவியின் ஆற்றலைப் பெறுகிறோம் என்பதை உணர்வோம். எதிர்நோக்கினால் தூண்டப்பட்ட நமது இருதயங்கள், இறையரசின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. சகோதர சகோதரிகளே, இறைவார்த்தைகளைப் படிப்பதை நமது பழக்கமாக்கிக் கொள்வோம். ஒவ்வொருவரும் ஒரு சிறிய நற்செய்தியை நமது பைகளில் வைத்திருக்க முயல்வோம். எங்குசென்றாலும் அதை நம்மோடு கொண்டு செல்வோம். அனுதினமும் படித்து கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் நம்மை அனுப்பியுள்ளார் என்ற நம்பிக்கையில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். அன்பினால் இவ்வுலகைப் படைத்து மீட்ட கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப உலகை மாற்றுவோம். நன்றி!
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரைக்கருத்துக்களை நிறைவு செய்ததும் நம்பிக்கை அறிக்கையானது பாடலாகப் பாடப்பட்டது. அதன்பின் சீனம், பிரெஞ்சு, அரபு, போர்த்துக்கீசியம், லின்காலா ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் திருப்பலியின் நற்கருணை வழிபாட்டுப் பகுதியைத் தொடர்ந்து வழிநடத்த திருப்பலியின் இறுதியில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து கத்தோலிக்கரும் தங்களின் திருவிவிலிய அறிவை அதிகமதிகமாய் வளர்த்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தும் நோக்கத்தில், திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறை இறைவார்த்தை ஞாயிறாக 2019ஆம் ஆண்டில் உருவாக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்