எதிர்நோக்கின் அடையாளமும் அமைதியின் தூதுவருமான புனித ஹென்றி
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிர்நோக்கின் அடையாளமாக அமைதியின் தூதுவராக பின்லாந்தின் பாதுகாவலரான புனித ஹென்றி இருக்கின்றார் என்றும், பல்வேறு தலத்திருஅவைகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அவரது திருநாளில் ஒன்றாக இணைந்து கடவுளைப் புகழ்வதன் வழியாக ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 20 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 33 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்குப் பாடகர் குழுவினருடன் வந்திருக்கும் அவர்கள் ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கின்றார் என்ற தமத்திரித்துவத்தைப் பாடல்கள் வாயிலாக எடுத்துரைக்கின்றனர் என்றும் கூறினார்.
நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே, நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக என்ற திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமடலில் உள்ள இறைவார்த்தைகளுக்கு ஏற்ப வாழ நாம் இந்த யூபிலி ஆண்டில் உறுதிப்படுத்தப்படுகின்றோம் என்றும், எதிர்நோக்கோடு நடப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எதிர்நோக்கின் அடையாளமாக அமைதியின் தூதுவராக புனித ஹென்றி இருக்கின்றார், கடவுளில் உறுதியான அடித்தளத்தைக் கண்டவர் அவர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மிகுந்த மதிப்புமிக்கதும், எளிதில் உடையக்கூடியதுமான அமைதி என்னும் கொடையை இறைவனிடம் தொடர்ந்து கேட்பதை நாம் ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது என்பதை புனித ஹென்றி வலியுறுத்துகின்றார் என்றும் கூறினார்.
கூட்டிசையின் மையமாக, உண்மையின் கூட்டிசையாக இருப்பவர் இயேசுவே என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவே உண்மை, அவர் மனுஉருவான உண்மை, அவரே கடவுளும் மனிதரும் ஆனவர் என்றும், உண்மையின் கூட்டிசையைக் காதுகளால் மட்டுமன்றி, இதயத்தாலும் கேட்க அழைப்புவிடுத்தார்.
உண்மையின் இசையை இதயத்தால் கேட்கும் எவரும் நம்மை அணுகிவரும் இறைமகனின் அன்பின் மறைபொருளால் தொடப்படுவார்கள் என்றும், ஏமாற்றம் தராத எதிர்நோக்கைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
வார்த்தை மனுஉருவான கடவுளின் அன்பிற்கு சான்று பகர்தல் என்பது திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற உண்மையான கிறிஸ்தவர்களாகிய நம் அனைவரின் ஒற்றுமையில் உள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறுதியில் அவரவர் மொழியில் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தினை செபிக்கக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்