நன்மையைச் செய்யும் பணியினைத் தொடர்ந்து ஆற்றுங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நன்மையைச் செய்யும் பணியினைத் தொடர்ந்து செய்யுங்கள் அது எதிர்காலத்தை மகிழ்ச்சியை, அமைதியை விதைக்கின்றது என்றும், மற்றவர்களின் நலனுக்காக பணத்தை நாம் முதலீடு செய்யும்போது அதிக பலன் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 18 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் வெரோனா கத்தோலிக்க நிறுவனத்தின் மண்டல உறுப்பினர்கள் ஏறக்குறைய 60 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் யூபிலி ஆண்டினைக் கொண்டாடி வருகின்ற நாம், இப்பூமியின் உரிமையாளர்களாக அல்ல மாறாக பாதுகாவலர்களாக இருக்கின்றோம் என்பதை யூபிலி ஆண்டு நினைவுபடுத்துகின்றது என்றும், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பொதுவான இல்லமாகிய இப்பூமியை ஞானமுள்ள மற்றும் மரியாதையுள்ள வகையில் பாதுகாக்கும் கடமை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
பொருளாதாரம் என்பதற்கு இல்லத்தை ஞானத்துடன் நிர்வகித்தல், பொதுவான இல்laமாகிய இப்பூமி, இச்சமூகம் ஆகியவற்றை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் என்பது பொருள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், நற்செயல் ஏதாவது ஒன்றினைச் செய்வதன் வழியாக வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்றும், நமது வாழ்க்கைத் திட்டத்தில் பிறருக்கு நல்லது செய்வதை ஒரு திட்டமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கத்தோலிக்க நிறுவனத்தின் பெயருக்கேற்ப பணியில் வளமும் தாராள மனப்பான்மையும் கொண்டு எப்போதும் அனைவருக்கும் நன்மை செய்து கொண்டே முன்னேறிச்செல்ல ஊக்குவித்த திருத்தந்தை அவர்கள், சமூகத்துறைப்பணிகளில் அர்ப்பண உணர்வுடன் அந்நிறுவனத்தார் ஆற்றிவரும் பணிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒற்றுமை, தன்னார்வத்தொண்டு, கலாச்சார மற்றும் தொழில்முறை பயிற்சி ஆகியவற்றின் முன்முயற்சிகளுக்காக அந்நிறுவனத்தாருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், வெரோனா மறைமாவட்டத்துடன் இணைந்து, குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவளித்து வருவதற்காக தனது பாராட்டுக்களையும் எடுத்துரைத்தார்.
எப்போதும் நன்மை செய்யவேண்டும், ஏனென்றால் உண்மையாக நம்பிக்கையுடன் வேலை செய்பவர்களுக்கு அதற்கான நிலையான வெகுமதி அளிக்கப்படும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருஅவையின் சமூகக் கோட்பாட்டின்படி, மிகவும் தேவையில் இருப்பவர்கள் தொடங்கி, அனைவருக்கும் நல்லது செய்யுங்கள் தொண்டுப் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள் என்றும் கூறினார்.
மற்றவர்களின் நலனுக்காக பணத்தை நாம் முதலீடு செய்யும்போது அதிக பலன் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஆயுத உற்பத்திக்கு சில நாடுகள் முதலீடு செய்வது வருத்தத்தினை அளிக்கின்றது, இது அறிவற்ற செயல் என்றும் எடுத்துரைத்தார்.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுத உற்பத்தியில் முதலீடு செய்வது இதயத்தைச் சுமையாக்கி, ஏழைகளின் குரலுக்கு செவிகொடுக்க முடியாத அளவிற்குக் கேட்கும் திறன் அற்றவர்களாகவும் கடின உள்ளம் கொண்டவர்களாகவும் நம்மை மாற்றுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மனித மாண்பிற்கான பணியில் செல்வத்தை பயன்படுத்தும்போது, பொது நன்மையை ஊக்குவிக்கப்பட்டு, நாம் அனைவரும் இணைந்து பங்கேற்கும் வகையில் சமூகத்தின் மேல் பிணைப்பு மேம்படுகிறது என்றும் கூறினார்.
கல்வி மற்றும் தொழிலாளர் அவசரநிலைகளை எதிர்கொள்ளும்போது, வரலாற்றை அன்புடன் வழிநடத்தி, நீதியின் வழியில் எதிர்காலத்தை உருவாக்கும் கடவுளின் இறைத்திருவுளத்தில் நமது நம்பிக்கையை தொடர்ந்து புதுப்பிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், நன்மையைச் செய்யும் பணியினைத் தொடர்ந்து செய்யுங்கள் அது எதிர்காலத்தை விதைக்கின்றது, மகிழ்ச்சியை விதைக்கின்றது, அமைதியை விதைக்கின்றது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்