துறவிகளுக்கு இணக்கமான அன்பான வாழ்க்கை முறை அவசியம் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் ஒவ்வொருவருக்கும் அவரவரின் சொந்த தூய்மைத் தனத்திற்கான நிலையான அர்ப்பணிப்பு, தீவிர இறையியல் தயாரிப்பு மற்றும் பணிக்கான தயாரிப்பு தேவை என்றும், அனைவருடனும், குறிப்பாக இளைஞர்களிடம் பழகுகின்ற இணக்கமான மற்றும் அன்பான வாழ்க்கை முறை தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 4 சனிக்கிழமை வத்திக்கானில் உள்ள கிளமெந்தினா அறையில் புனித சியன்னா கேத்தரின் மறைப்பணியாளர்கள் துறவறசபையாரின் 15ஆவது பொதுப்பேரவை உறுப்பினர்கள் ஏறக்குறைய 50 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சபையாரின் நூற்றாண்டிற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திருஅவையின் பயணத்தில் ஒன்றிப்பின் எதிர்காலத்தை ஒன்றாக புரிந்துகொள்வதற்காக நிகழ்காலத்தை புரிந்துகொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ள அவர்களது பொதுப்பேரவையின் கருப்பொருள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பள்ளி என்பது ஒரு பணி அதனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என்றும் எதிர்காலத்தை புரிந்துகொள்வதற்கான பணி என்பது எப்போதும் இயக்கத்தில் இருப்பது மாறாக நின்று விடுவது அல்ல என்றும் எடுத்துரைத்தார்.
இறந்தவர்கள் மட்டுமே இயங்காமல் நின்று விடுவார்கள் திருஅவையுடனான பயணம் என்பது எப்போதும் இயக்கத்தில் இருப்பது அழகானது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், வணக்கத்திற்குரிய லூஜியா டின்கானி அவர்களின் வரிகளான, கிறிஸ்தவ மனிதநேயத்தை ஊக்குவிப்பதன் வழியாக, நமது காலத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள், குறிப்பாக நம்பிக்கையில் அக்கறையற்றவர்கள் மற்றும் தொலைதூரத்தில் உள்ளவர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களை வழங்குவது திருஅவைப் பயணத்தின் பணி என்றும் கூறினார்.
தய்மத்தனம், தயாரிப்பு, இணக்கமான வாழ்க்கை முறை அருள்சகோதரிகளுக்குத் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், புளிங்காடி எனப்படும் வினிகர் போன்று வருத்தம், கவலை, கடினம் கொண்ட முகம் உள்ளவர்களாக சகோதரிகள் இருத்தலாகாது என்றும், எல்லோருடன் இணக்கமான அன்பான உறவு கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தய்மத்தனம்
புனிதம், தய்மத்தனம் என்பது மிகவும் சவாலான வார்த்தை, நம்மை அச்சுறுத்தக்கூடியது சில நேரங்களில் அதனைக் கடைபிடிக்க கடினப்படுகின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தய்மத்தனம் நமது வாழ்வில் இலக்கு, மகிழ்ச்சியான விடயம், அது ஆன்மிக மகிழ்ச்சியை நம்மை நோக்கி ஈர்க்கின்றது என்றும், இறைவனது அருளால் அந்த தூய்மைத்தனத்தை புனிதத்தை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
இளம் அருள்சகோதரிகள் நற்செய்தி அறிவுரைகள், திருவருளடையாளங்கள், இறைவார்த்தைக்கு செவிமடுத்தல் மற்றும் தியானித்தல் தனிசெபம் மற்றும் குழுசெபம் என்னும் செயல்கள் வழியாகக் கிறிஸ்துவைப் பின்பற்றுதல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தேவையற்ற பேச்சுக்கள் நமது நற்பண்புகளைக் கெடுத்துவிடும் நச்சுத்தன்மை உடையது, நம்மைக் கொல்லக்கூடியது அவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தயாரிப்பு
அர்ப்பணிப்பு உணர்வுடன், ஒருவரின் அறிவு மற்றும் திறன்களை தொடர்ச்சியான ஆய்வு மற்றும் ஆழப்படுத்துதல், தடைகளைக் களைதல், கற்றறிந்த உண்மைகளைப் பற்றிய உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பகிர்வுகள், கற்பித்தல் மற்றும் தொடர்பு முறைகளை மேம்படுத்துதல் ஆகியவை தேவை என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு அலகையுடன் ஒருபோதும் உரையாடல் மேற்கொள்ளவில்லை மாறாக இறைவார்த்தை கொண்டு பதிலளித்தார் என்றும் கூறினார்.
இணக்கமான உறவு
துறவறக் குழுக்களுக்குள் அலகை நுழைகின்றது பொறாமை, மற்றும் ஆண்கள், பெண்கள் என அனைவரிடத்தில் வருகின்றது. எனவே அலகையுடன் ஒருபோதும் உரையாடல் மேற்கொள்ளாதீர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தூய ஆவியாரின் கொடையான அன்பின் தூதுவர்களாக இருங்கள், இது ஆன்மாவின் பரிசு, மற்றும் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
இறைஅழைத்தல் குறைந்து வரும் சூழலில் மறைப்பணியினை துணிவோடும் திறந்த உள்ளத்தோடும் உலகில் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக தேவையில் இருக்கும் பகுதிகளுக்குப் பணியாற்றுங்கள் என்றும், தூய்மையான வாழ்க்கை, தயாரிப்பு, இணக்கமான உறவு கொண்டு வாழுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்