எதிர்நோக்கு உண்மைத் தன்மையில் வேரூன்றப்பட்டிருக்கின்றது
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்றாட முயற்சியில், சிரமங்கள் மற்றும் தோல்விகள் பலவற்றை எதிர்கொண்டாலும் கல்வியாளர்கள் கொண்டுள்ள எதிர்நோக்கானது அவர்களைத் தொடர்ந்து இயக்கி வழிநடத்துகின்றது என்றும், ஒரு மாணவரின் வளர்ச்சிக்கு தன்னை நம்பிக்கையோடும் பொறுமையோடும் அர்ப்பணிக்கும் ஓர் ஆசிரியரின் எதிர்நோக்கானது சாதாரணமானதல்ல மாறாக அது உண்மையில் வேரூன்றப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 4 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கத்தோலிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள் (UCIIM), இத்தாலிய கத்தோலிக்க ஆசிரியர்களின் சங்கத்தார் (AIMC), கத்தோலிக்க பள்ளிகளின் பெற்றோர் சங்கத்தார் (AGESC) என ஏறக்குறைய 2050 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது மாணவர்களின் உலகில் நுழையும் ஓர் ஆசிரியரைப் போல, கடவுள் வாழ்க்கை மற்றும் அன்பின் மொழி வழியாகக் கற்பிக்க மனிதர்களிடையே வாழ்வதற்கான வாழ்வைத் தேர்ந்தெடுத்தார் என்றும், ஏழ்மையான நிலையில் பிறந்த இயேசுவின் பிறப்பு தாழ்ச்சி, நன்றியுணர்வு, வரவேற்றல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடனிருப்பு, இரக்கம், மென்மை என்னும் கடவுளின் பண்புகளை மறந்துவிடாதீர்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தொலைதூரக் கற்பித்தல் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாத கற்பித்தல், பிறருடனான உறவில் இருந்து நம்மை தூரமாக வைக்கின்றது ஒரு போதும் உதவுவதில்லை என்றும், கிறிஸ்து பிறப்பு நமக்கு பிறர் பணியில் அன்பையும் வளமையையும் கற்பிக்கின்றது என்றும் கூறினார்.
கடவுளின் இத்தகைய கற்பித்தல் ஒரு கொடை என்றும், இது பிறருடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான அழைப்பாகவும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலையில் இருப்பவர்கள் முதல், ஒவ்வொரு நபரின் மாண்பை அங்கீகரிக்கவும், குழந்தைப் பருவம் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தின் மதிப்பைப் பாராட்டவும் இந்த கற்பித்தல் அழைப்புவிடுக்கின்றது என்றும் கூறினார்.
கடவுளின் கற்பித்தலுக்கு மையமாக இருப்பது குடும்பம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குடும்பத்தில் உரையாடல் இல்லாமல் அலைபேசி அதனை கெடுத்துவிடுகின்றது என்றும், குடும்பத்தில் உரையாடல் முக்கியமானது ஏனெனில் நாம் வளர அது உதவுகின்றது என்றும் கூறினார்.
ஆசிரியர்கள் சந்திக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் மூடப்பட்ட எதிர்நோக்கு இருக்கின்றது என்றும், அது நன்மையை எதிர்நோக்கி நாளை என்ன நடக்கும் என்பதை அறியாத எதிர்நோக்காக இருக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்ற நம்பிக்கையில் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
எல்லா மனித ஆசைகளையும் மிஞ்சுகின்ற எதிர்நோக்கானது, மனித மனதையும் இதயத்தையும் வாழ்க்கைக்கும் நிலையான அழகுக்கும் திறக்கிறது என்றும், இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்