MAP

Conrad Hilton நிறுவன குழுமத்தினருக்கு உரை வழங்கும் திருத்தந்தை Conrad Hilton நிறுவன குழுமத்தினருக்கு உரை வழங்கும் திருத்தந்தை   (Vatican Media)

உடைந்த உள்ளங்களில் நம்பிக்கை எனும் ஒளியேற்றுவோம்!

ஒவ்வொரு நபரும், அவரது தோற்றம் அல்லது நிலை எதுவாக இருந்தாலும், மனித மாண்புடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஓர் உலகத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புறந்தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் மிகவும் தேவையான மாற்றத்தின் முதல்வர்களாக இருக்கக்கூடிய ஓர் உலகத்தை நான் கனவு காண்கிறேன் என்றும், அதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகளாக ஒன்றிணைந்து வாழ முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 22, புதன்கிழமை இன்று, திருப்பீடத்தில் Conrad Hilton நிறுவன குழுமத்தினருக்கு வழங்கிய உரையொன்றில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நல்ல சமாரியரின் வழியில் அவர்கள் ஆற்றிவரும் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக மனமுவந்து அவர்களைப் பாராட்டினார்.

தாராள மனப்பான்மையும் அர்ப்பணிப்பும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழ்கிறோம் என்பதை உணரும் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதை உங்கள் நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கல்வி, உடல்நலம், புலம்பெயர்ந்தோர் உதவி, வறுமைக்கு எதிரான போராட்டம் ஆகிய துறைகளில் நீங்கள் இலவசமாக வழங்கும் சேவைகள் அன்பு மற்றும் இரக்கத்தின் உறுதியான சான்றுகளாகும் என்றும் கோடிட்டுக்காட்டினார்.

Conrad Hilton அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளித்து, ஏழைகளுக்குப் பணியாற்றும் பொருட்டு பெண் துறவியருக்கு இந்த நிறுவனம் வழங்கிவரும் உறுதியான ஆதரவையும் தனது உரையில் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இளைய மற்றும் வயதான சகோதரிகளின் கல்வி மற்றும் பராமரிப்பில் இந்நிறுவனத்தினரின் பங்களிப்புகள் மற்றும் அவர்களின் தொழில்முறை மற்றும் புறப்பணி நிலையச் சேவைகளை மேம்படுத்துவதற்கு வத்திக்கான் நிறுவனங்களுடனான அவர்களின் ஒத்துழைப்பையும் ஒப்புக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு நபரும், அவரது தோற்றம் அல்லது நிலை எதுவாக இருந்தாலும், மனித மாண்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஓர் உலகத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும் என்றும், தனியாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று உணர்பவர்களின் இதயங்களில் நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்ற நாம் ஒன்றிணைந்து உதவ முடியும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2025, 12:36