MAP

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை அவர்களின் ‘எதிர்நோக்கு' என்ற சுயசரிதை நூல்

‘எதிர்நோக்கு' என்ற புத்தகத்திற்கென பல அரிய புகைப்படங்களையும், இதுவரை வெளியிடப்படாத சில விவரங்களையும் திருத்தந்தையே தானே முன்வந்து வழங்கியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சில காலமாக எதிர்பார்க்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘எதிர்நோக்கு' என்ற சுயசரிதை நூல் ஜனவரி 14, செவ்வாய்க்கிழமையன்று 80 நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

திருத்தந்தை தன் கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது, பொன்மொழிகள், புகைப்படங்கள் போன்றவை தற்போது ஒரு தொகுப்பாக கிடைக்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் Random House வெளியீட்டு நிறுவனமும், இங்கிலாந்தில் Viking வெளியீட்டு நிறுவனமும் இந்த நூலை ஆங்கிலத்தில் வெளிட்டுள்ளன.

பொதுவாக ஒரு திருத்தந்தை இறைபதம் சேர்ந்தபின் வெளியிடப்படுகிற அவர் குறித்த நினைவலைகள், தற்போது யூபிலி ஆண்டையொட்டி அதன் பின்னணியில் வெளியிட முடிவு செய்ததாக Random House வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்புத்தகத்திற்கென பல அரிய புகைப்படங்களையும், இதுவரை வெளியிடப்படாத சில விவரங்களையும் திருத்தந்தையே தானே முன்வந்து வழங்கியுள்ளார். 

ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டு வந்துள்ள இந்த புத்தகம், 20 ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலிருந்து துவங்கி, அவரின் இத்தாலிய முன்னோர்கள், அவர்கள் எவ்வாறு துணிவுடன் இலத்தீன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள் என்பவைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பின்னர், அவரின் பாலபருவம், இளம்பருவத்தின் ஆர்வங்களும் முன்நோக்கங்களும், அவரின் தேவ அழைப்பு, இளமைப்பருவ வாழ்வு, இன்றுவரையுள்ள அவரின் பாப்பிறைப் பணி ஆகியவைகளுடன் இந்நூல் தொடர்கிறது.

தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, தன் பாப்பிறை காலத்தில் தான் எதிர்கொண்ட சில சிக்கலான நேரங்கள், இக்காலத்தின் பல முக்கியமான நெருக்கடி நிறைந்த கேள்விகள், இன்றைய உலகை பாதிக்கும் போர்கள், உலகம் மற்றும் மதத்தின் வருங்காலம், சமூகக் கொள்கைகள், புலம்பெயர்வு, சுற்றுச்சூழல் நெருக்கடி, பெண்கள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள், பாலியல் போன்றவைக் குறித்தும் திருத்தந்தையின் கருத்துக்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2025, 15:21