MAP

நம்பிக்கை மற்றும் மனித நேயத்தில் குழந்தைகள் வளரவேண்டும்

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம் வழங்கும் வழிபாடானது 1981 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் நிறுவப்பட்டு பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

குழந்தைகள் நம்பிக்கையிலும், குடும்பத்தின் மகிழ்ச்சியில் உண்மையான மனித நேயத்திலும் வளர வேண்டும் என்றும், திருவருளடையாளங்கள் மற்றும் செபங்கள் வழியாக நாம் அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் திருமுழுக்கு விழாவை திருஅவை நினைவுகூரும் வேளையில் வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகள் ஏறக்குறைய 21 குழந்தைகளுக்கு திருமுழுக்கு  வழங்கியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய கொடை என்றும், நம்பிக்கையின் பரிசு என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் நல்ல சூழ்நிலையை உணர வேண்டும் எனவே அவர்கள் பசியாக இருந்தால் உணவளியுங்கள், தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்னையர்களுக்கு பரிந்துரை செய்தார்.

பெற்றோர்ஒவ்வொருவரும், திருஅவையும், குழந்தைகளுக்கு மிகப்பெரிய கொடையாக, நம்பிக்கையின் பரிசாக திருமுழுக்கு வழங்குகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இவ்வழிபாட்டின் போது ஏற்றப்படும் மெழுகுதிரியினை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள், வீட்டில் பிரச்சனைகள் மற்றும் துன்பங்கள் ஏற்படும்போது அதனை ஏற்றி இறைவனின் அருளையும் இரக்கத்தையும் உங்கள் குடும்பத்திற்காக வேண்டி வழிபடுங்கள் என்றும் கூறினார்

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் வழிபாடானது 1981 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் நிறுவப்பட்டு பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதல் இரண்டு ஆண்டுகள் புனித பவுலின் சிற்றாலயத்தில் நடைபெற்ற இவ்வழிபாடானது, 1983 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சிஸ்டைன் சிற்றாலயக் கோவிலில் நடைபெற்று வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜனவரி 2025, 13:30