நீதியும் சகோதரத்துவமும் கொண்ட உலகைக் கட்டியெழுப்புவோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உடன்பிறந்த உணர்வு, மன்னிப்பு மற்றும் அமைதியின் வழியில் திறந்த இதயத்தைக் கொண்டிருக்க இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்றும், இதன் வழியாக சகோதரத்துவ மற்றும் நீதியான உலகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி சூடானில் தொடர்ந்து நடந்து வரும் மோதல், உலகில் மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது என்றும், தென்சூடானிலும் அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தி வரும் இப்போரினால் பாதிக்கப்படும் மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 26, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களைப் போரின் ஒரு கருவியாக மாற்றுவதை அனுமதிக்காது உடன்பிறந்த உணர்வு, ஒற்றுமை ஆகியவை கொண்டு சிறந்து விளங்க அழைப்புவிடுத்தார்.
போரில் ஈடுபடுபவர்கள் அனைவரும் போர் மற்றும் வன்முறையைக் கைவிட்டு உரையாடல் முறையில் பேச்சுவார்த்தை நடத்த தான் அழைப்புவிடுப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படை உதவிகள் சென்றடையவும், போரில் ஈடுபடுபவர்கள் அமைதிக்கான பாதைகளைக் கண்டறியவும், பன்னாட்டுச் சமூகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.
கொலம்பியாவின் கட்டடும்போ பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், பாதிக்கப்படைந்த மக்கள் ஒவ்வொருவருக்காகவும் செபிப்பதாகக் கூறி தனது ஆன்மிக நெருக்கத்தை எடுத்துரைத்தார்.
உலக தொழுநோயாளர் தினமாகிய இன்று இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் மீண்டும் நல்ல உடல் நலன் பெற்று சமூகத்தில் மீண்டும் ஒன்றிணையவும் உழைக்கும் மக்களின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறவும் ஊக்கமூட்டிய திருத்தந்தை அவர்கள், சமூகத்தில் அத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பு பன்னாட்டு நினைவுநாளின் எண்பதாவது ஆண்டு சனவரி 27, திங்கள்கிழமை சிறப்பிக்கப்படுவதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இலட்சக் கணக்கான யூதர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மக்கள் அழிக்கப்பட்டதன் கொடூரத்தை மறக்கவோ மறுக்கவோ முடியாது என்றும், உரோமில் வாழும் எடித் பர்க் என்னும் ஹங்கேரிய கவிஞர் இத்தகைய கொடூரத்தை அவ்வதை முகாமில் அனுபவித்தவர் என்றும் கூறினார்.
இனப்படுகொலையின்போது தங்களது உயிரை இழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்நாளில் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், யூத மக்களுக்கு எதிரான கொடுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற தனது வேண்டுகோளை புதுப்பிப்பதாகவும், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் மத துன்புறுத்தல்களையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.
இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக இந்நாட்களில் தங்களது யூபிலியை சிறப்பித்த சமூகத்தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் வாழ்த்தி எப்போதும் எதிர்நோக்கின் கதைகளை எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
உரோமில் உள்ள கத்தோலிக்கச் செயல்பாடுகள் மற்றும் கத்தோலிக்கப் பள்ளிகளின் சிறுவர் சிறுமிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உலக அமைதியை வலியுறுத்திய அவர்களது கூட்டத்தின் முடிவில் அவர்கள நமக்குக் கூற இருக்கும் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம் என்று கூறி தன்னுடன் இருந்த சிறாரை தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க அழைத்தார்.
சிறுவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்ததும் ஆயுதங்களை அமைதியாக்குதல் என்று அவர்கள் கூறிய வரிகளை மீண்டும் நினைவுகூர்ந்து அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை அவர்கள் அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்