MAP

வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள்  (ANSA)

அமைதிக்காகப் பணியாற்றிய இணைப்பாளர்களின் பணி சிறந்தது

அமைதியை ஏற்படுத்துவதற்காக தலையிட்டு அதில் வெற்றி கண்ட அனைத்து இணைப்பாளர்களின் பணி நல்ல பணி

மெரினா ராஜ் - வத்திக்கான்

காசாவில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு தத்தம் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்றும், மனிதாபிமான உதவிகள் அனைத்தும் தேவையில் இருக்கும் காசா மக்களை இனி மிக விரைவில் சென்றடையும் என்று நம்புவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 19 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் நிறுத்தத்திற்காக முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.  

அமைதியை ஏற்படுத்துவதற்காக தலையிட்டு அதில் வெற்றி கண்ட அனைத்து இணைப்பாளர்களின் பணி நல்ல பணி என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள்,  இருதரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைகள் அனைத்தும் மதிக்கப்படும் என்று நம்புவதாகவும்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த மக்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் கூறினார்.

இஸ்ரயேல் மக்கள் பாலஸ்தீனியர்கள் இருவருக்குமிடையே எதிர்நோக்கின் உறுதியான அடையாளங்கள் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இரு நாடுகளின் அரசுத்தலைவர்கள் பன்னாட்டுத் தலைவர்களின் உதவியுடன், சரியான தீர்வுகளை அடைய முடியும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

உரையாடல், இணக்கம், மற்றும் அமைதிக்கு ஆம் என்று கூறுபவர்களாக நாம் அனைவரும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள்,  மக்கள் நடுவில் உரையாடலும் இணக்கமும் அமைதியும்  பெருகவும் நிலைத்து நிற்கவும் செபிப்போம் என்றும் கூறினார்.

அண்மையில் கியுயூபா சிறைச்சாலையில் இருந்து கைதிகளின் குழுக்கள் விடுதலை அறிவிக்கப்பட்டது யூபிலி ஆண்டின் நோக்கங்களில் ஒன்றை உறுதிபடுத்தும் எதிர்நோக்கின் பெரிய அடையாளம் என்றும், வரும் மாதங்களில், உலகின் பல்வேறு பகுதிகளில், தனிநபர்கள் மற்றும் மக்களின் பயணத்தில் எதிர்நோக்கை வளர்க்கும் இவ்வகையான முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இக்காலத்தில் இயேசுவின் சீடர்கள் அனைவரிடத்திலும் முழுமையான ஒற்றுமையின் விலைமதிப்பற்ற பரிசை கடவுளிடமிருந்து வேண்டிக்கொள்வதை நிறுத்தக்கூடாது என்றும், துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எப்போதும் ஜெபிப்போம் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜனவரி 2025, 14:07